Thursday, March 12, 2009

எனக்குள் நானே


நீ
புன்னகைக்கும் போதெல்லாம்–என்னுள்
புதுரத்தம் பாய்கிறது 
உண்மையைச் சொல்
செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது
சிரிப்பதற்கா? அல்லதெனைச்
சிலிர்ப்பூட்டுவதற்கா?


தினமும் எழுந்து
சிந்திக்கிறேன் பெண்ணே –உன்
சிரிப்புக்குவமைகளை
கடைசியில் என்னையே நான்
நிந்தித்துக்கொள்கிறேன்
வராத வார்த்தைகளுக்காய்!

நிட்சயமாய்ச் சொல்வேன்
நீதானெனக்குச்
சிரிக்கக் கற்றுக்கொடுத்தவள் –என்
வாழ்வின் மனஇறுக்கங்களால்
தோன்றிய வேதனைகளுக்கு நீ
மரண தேவதை!

அதுவோர் காலங் கண்ணே
எல்லோருக்கும் விடிந்திருக்கும் நான் மட்டும்
இருட்டில் நடந்து கொண்டிருப்பேன் உன்
புன்னகைப் பொற்கரங்கள்
என்னிமைகளைத் தட்டித்திறக்காதவரை

நினைத்துப் பார்க்கிறேன்-நாம்
பேசிக்கொண்டதைவிட
பிரியமாகச் சிரித்துக்கொண்ட
பொழுதுகள் ஏராளம்-ஒருவேளை
முறைத்துக் கொண்டால்கூட
அதுயார் முதலில்
சிரித்துக்கொள்வதென்பதற்காகவே
இருந்திருக்கும்!

விலகிப் போனபின்னும்
நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன் என்
சின்ன இதயத்தில் என்றாவதொருநாள் நினைத்து
எனக்குள் நானே சிரித்துக் கொள்வதற்காய்!

No comments:

Post a Comment