Friday, September 23, 2011

மறக்க முடியாத கடிதம்


தனது பேரனைப் பாதுகாக்க வழியின்றி நகரத்திலுள்ள ஒரு பணக்கார வீடொன்றில் கொண்டுபோய்ச் சேர்க்கிறார் தாத்தா. அவர் தனது பேரனை விட்டுவிட்டு ஊர் திரும்பிய ஓரிரு நாட்களிலேயே சித்ரவதை செய்ய ஆரம்பிக்கிறது அப்பணக்காரக் குடும்பம். பல நாள் அடி, உதை, பட்டினிகளுக்குப் பிற்பாடு….எப்படியோ அவர்களது கண்களுக்குத் தப்பித்து கடிதம் ஒன்றினை எழுதுகிறான் அப்பேரன்:
“அன்புள்ள தாத்தாவுக்கு,
நீ விட்டுவிட்டுப் போன சில நாட்களிலேயே இங்குள்ளவர்கள் மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.
அவர்கள் தினந்தோறும் அடிப்பதையும், சூடு வைப்பதையும் என்னால் தாங்க முடியவில்லை.
நான் இன்றோடு சாப்பிட்டு மூன்று நாட்களாச்சு. எப்படியாவது உடனே வந்து
என்னை நமது கிராமத்துக்கே கூட்டிக் கொண்டு போய் விடு. மிக அவசரம்.”
என்று எழுதிவிட்டு பின்புறம் திருப்பித் தனது தாத்தாவின் முகவரியை எழுதுகிறான் அப்பேரன். இப்படியாக…..
பெறுநர்:
தாத்தா,
கிராமம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது


மத்திய அரசு இந்தியாவில் இன்னமும் பண்டமாற்று முறைதான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ?
பெட்ரோல்டீசல் விலை உயர்வால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று துண்டு போட்டுத் தாண்டி சத்தியம் செய்கிறார்கள் மன்மோகன்சிங்கும்,பிரணாப் முகர்ஜியும்.
என்னவோ ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் மக்கள் அரிசியைக் கொடுத்து கோதுமையை வாங்கிக் கொள்வதைப் போலவும்…..காய்கறிகளைக் கொடுத்து உப்பும்,சக்கரையையும் பரிமாறிக் கொள்வதைப் போலவும் பினாத்துகிறார்கள்.
எந்தப் பொருளாக இருந்தாலும் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணப்பட்டால்தான் பரிவர்த்தனையே நடக்கும்அப்படிப் பயணப்பட வேண்டுமென்றால் லாரிகளில் டீசலுக்கு பதிலாக தண்ணீரை நிரப்பிக் கொண்டு ஓட்டமுடியாதுஅப்படிப்பட்ட மகத்தான தொழில் நுட்பத்தையும் இந்த மேதைகள் நமக்குக் கண்டுபிடித்துத் தரவில்லை.
அப்படியிருக்கையில் டீசல் விலை உயர்ந்தால் லாரி வாடகை உயரும்….. லாரி வாடகை உயர்ந்தால்…அதில் பயணப்படும் கட்டுமானப் பொருட்கள் தொடங்கி உயிரைக் காப்பாற்றக் கூடிய மருந்துகள் வரைக்கும் அத்தனை பொருட்களது விலையும் கட்டாயம் உயரும் என்பது அஞ்சாங்கிளாஸ் படிக்கும் பையனுக்குக் கூடத் தெரியும் ஆனால் உலக வங்கியிலேயே குப்பை கொட்டிய இந்த ”மகாமேதை” மன்மோகன் சிங்குக்குத் தெரியாமல் போனது எப்படி?
இந்த லட்சணத்தில்…..
2011 இல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி சதவீதமாக அதிகரிக்கும்……
அதைத் தொடர்ந்து இரட்டை இலக்கத்தை எட்டும்…….
18 சதவீதத்தை எட்டியுள்ள உணவுப் பொருட்களின் விலை உயர்வு அப்படியே தொபுக்கடீர்ன்னு குறையும்…….
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு பண வீக்கத்தை அதிக அளவுக்கு அதிகரிக்காது…….
ஒட்டுமொத்தமாக 0.4 சதவீதம்தான் பணவீக்கம் இருக்கும்….” என்று ஆளாளுக்கு அள்ளி வீசுகிறார்கள்.
கேட்கிறவன் காங்கிரஸ்காரன்னா….மன்மோகன்சிங்கே மார்க்சீயவாதிம்பாங்க போலிருக்கு.
மொத்தத்தில்……..
பொருளாதாரமும் சரியாகப் போவதில்லை…….
விக்கிற விலையில் இருக்கிற தாரமும் தாக்குப் பிடிக்கப் போவதில்லை…….

தீவிரவாதிகள் – அகிம்சாவாதிகள் – தியாகிகள் – துரோகிகள் - என்கிறார்களே அது யார் யார்?


தீவிரவாதிகள் யார்?
அடிப்படைவாதிகள் யார்?
போராளிகள் யார்?
பயங்கரவாதிகள் யார்?
இவர்களுக்குள் என்ன அடிப்படை வேறுபாடு?
அதைக் காட்டிலும் இவர்கள் எதன் பொருட்டு…?
ஏன் உருவாகிறார்கள் என்பது அடிப்படையிலும் அடிப்படையான கேள்வி.
நமக்கு எப்போதுமே ‘விளைவுகள்’தானே முக்கியம்…
அடிப்படைக் காரணங்கள் ஆயிரம் இருந்தாலென்ன?
வரலாற்று ரீதியாகப் பார்த்தால்
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அந்நியரோடு போர் தொடுத்த
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ‘தீவிரவாதி’.
ஆனால் இந்திய கப்பற்படை எழுச்சியை எதிர்த்த
மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி ‘அகிம்சாவாதி’.
பாரத் நவ ஜவான் சபாவை கட்டமைத்து
அப்பாவிகள் யாரும் சாகாது குண்டு வீசிய பகத்சிங் ‘அதி பயங்கரவாதி’.
பகத்சிங்கை தூக்கிலேற்றிய ஆங்கிலேய அரசு ‘மிதவாதி’.
ஆகஸ்டுப் ‘புரட்சி’யில் தந்திக் கம்பங்களைச் சாய்த்து
தபாலாபீசுகளைக் கொளுத்திய காங்கிரஸ்காரர்கள்
பிரிட்டிஷ் கணக்குப்படி பார்த்தால் ‘பயங்கரவாதிகள்’.
சுதந்திர இந்தியாவின் கணக்குப்படி தேசத் தியாகிகள்
இந்தக் குழப்பம் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களூக்கு
மட்டும்தான் என்றில்லை,
தத்துவப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கும் நீடிக்கத்தான் செய்தது.
சாதியை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம முறையை
ஏற்றுக்கொண்ட எம்.கே.காந்தி அகிம்சாவாதியாகவும்…
சாதீய அமைப்பையே தகர்த்தெறிய வேண்டும் என்று போராடிய
பி.ஆர்.அம்பேத்கர் தீவிரவாதியாகவும் சித்தரிக்கப் பட்டது வரலாற்றுச் சோகம்.
எண்ணக் குதிரையை எண்பதுகளில் நிறுத்தினால்
ஸ்வீடனிலிருந்து ‘அதி நவீன’ ஆயுதங்கள் வாங்கிக் குவித்த
ராஜீவ்காந்தி ‘தேச பக்தர்’.
அந்த பணத்தில் ஒரு லட்சம் ஓராசிரியர் பள்ளிகளுக்கு
ஓடாவது போட்டிருக்கலாமே என்றவர்கள் ‘தேசத்துரோகிகள்’.
சர்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவின் ‘முற்போக்கு’க் கணக்குப்படி…
திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சொன்னவுடன் வந்தால் போராளிகள்.
பிற்பாடு வந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் ‘தீவிரவாதிகள்’.
‘அறவழியில்’ கருப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினரிடமிருந்து
இந்திராவைக் காப்பாற்றிய நொடிவரையில்
காங்கிரஸ்காரர்களுக்கு நெடுமாறன் ஒரு தேசபக்தர்.
பிற்பாடு ‘தேசத்துரோகி’.
நல்லவேளையாக இவர்கள் ‘இந்திராவைக் காப்பாற்றியதே
மிகப்பெரிய தேசத்துரோகம்’ என்று சொல்லாமல் விட்டார்களே
என்கிற அளவில் மற்றவர்கள் மகிழ்ச்சி அடையலாம்.
சர்வதேச அளவிலாகட்டும் – இந்திய அளவிளாகட்டும் -
அவரவர்களுக்கென்று தனித்தனி அகராதிகள்.
அவைகளுக்கே உரித்தான புதுப் புது அர்த்தங்கள்
மத சம்பந்தமான விஷயங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
பாபர் மசூதியை இடிப்பவன் ‘மிதவாதி’.
இடிப்பைக் கண்டிப்பவன் ‘முஸ்லிம் தீவிரவாதி’…
(உலகளாவிய ‘பார்வையில்’
இந்து – கிருஸ்துவ – யூதத் தீவிரவாதிகள் என்று யாருமே கிடையாது
என்பது சுவாரசியமான விஷயம்.)
பாலஸ்தீனியர்களை சொந்த மண்ணை விட்டு
விரட்டியடிப்பது ‘அகிம்சாவாதம்’.
நாடற்றவர்கள் அவலக் குரல் எழுப்புவது ‘பயங்கரவாதம்’.
மான்கடா படைத் தாக்குதலில் விசாரிக்கப்பட்டபோது
பிடல் காஸ்ட்ரோ ஒரு ‘பயங்கரவாதி’.
மக்கள் அலையில் பாடிஸ்டா மூழ்கடிக்கப்பட்டபோது
பிடல் காஸ்ட்ரோ புரட்சியின் நாயகன்.

வரலாறுகள் மாறும்போது…
இன்றைய “துரோகிகள்”….
நாளைய தியாகிகள்.
ஆனால்….
இன்றைய “தியாகிகள்….?

ஒரே கொடியில் பூத்த இரு மலர்கள்


வெளிப்பார்வைக்குப் பார்த்தால் பிஜிபி.யும் காங்கிரசும் வேறு வேறாகத்தான் தோன்றும். ஆனால் இந்த இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பது கொஞ்சம் ஊன்றிப்பார்த்தால்தான் புரியும்.
அன்றைய காந்தி கொலையில் இருந்து இன்றைய அணுவிபத்து நஷ்ட ஈட்டுக் கொள்கை(?) வரைக்கும் இரண்டுமே ஒன்றுதான்.
(இந்த இரண்டின் லட்சணங்களையும் புட்டுப் புட்டு வைக்கும் புத்தகம் ஒன்றினை சமீபத்தில்தான் வாசித்தேன். எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை எழுதி ”அடையாளம்” பதிப்பகம் வெளியிட்டுள்ள “இந்து இந்தியா” என்கிற நூல்தான் அது. காங்கிரஸ் பற்றியும் பிஜெபி பற்றியும் ஏகப்பட்ட வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுகிறது அந்தப் புத்தகம். வாசிக்க விருப்பமுள்ளவர்கள் யோசிக்காமல் டயல் செய்ய வேண்டிய எண்: 04332 273444.)
கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்……….
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கொல்லப்படுவதற்கு ஓரிரு மாதங்கள் முன்பே…….
“காந்தியைக் கொலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப் படுகின்றன……
பிர்லா மாளிகையில் காந்தி மீது குண்டு வீசப்படுகின்றது……..
நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த கொடூர நிகழ்ச்சி குறித்த புலன்விசாரணையை மேற்கொண்ட போலீசார் முழு விவரங்களையும் கண்டறிவதில்லை……
குண்டுவீச்சுக்குப் பிறகு காந்தியின் உயிரைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகளோ……. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை……
மதவெறி பிடித்து மோதிக்கொள்ளும் தரப்புகள் ரத்ததாகத்தை நிறுத்த வேண்டும் என காந்தி உடனடியாக உண்ணாவிரதத்தில் குதிக்கிறார் (இரண்டரை மணி நேரமல்ல)………
ஆனால் காந்தியின் உண்ணாநிலை தனக்கு எதிரானது என வல்லபாய்பட்டேல் முடிவுகட்டிக் கொண்டு போக வேண்டாம் எனப்பலர் தடுத்தும் காந்தியைக் கைவிட்டு விட்டு டெல்லியில் இருந்து பம்பாய்க்கு பொட்டி தூக்குகிறார்…….
எந்த நேரமும் கொல்லப்படலாம் என ஆபத்தில் இருக்கும் காந்தியை அம்போ என விட்டுவிட்டு பட்டேல் பம்பாய் சென்றது உள்ளூர் போலீஸ்காரர்கள் மீது மிக மோசமான அவப்பேரை உருவாக்குகிறது.
ஏனெனில் பாதுகாப்புக்கான ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டியதே பட்டேல்தான். உள்ளூர் அதிகாரிகள் சர்தார் பட்டேலிடம் இருந்து காந்தியைப் பாதுகாப்பதற்கான உத்தரவுகள் வரும் வரும் வரும் வரும் வரும் எனக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் வெறும் காத்துதான் வருகிறது பம்பாய்க்குப் போன பட்டேலிடம் இருந்து.
காந்திஜியின் பாதுகாப்புக்காக சிறப்பு ஆணைகள் எதையும் பட்டேல் வழங்காததைக் கண்ட அதிகாரிகள் “இந்தக் கிழவனுக்கெல்லாம் எதற்குப் பாதுகாப்பு?” என மூலையில் ஒதுங்கி குறட்டை விட ஆரம்பிக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு பொன்னான வாய்ப்புக்காகக் காத்திருந்த நாது ராம்கோட்சே நிர்க்கதியாய் தனித்து விடப்பட்ட அந்தக் கிழவரை சுட்டுக் கொல்வதன் மூலம் தன் தாகத்தைத் தணித்துக் கொள்கிறான்.
இந்த நாது ராம் கோட்சேவுக்கும் இந்து மகாசபைக்கும் இருந்த  நெருங்கிய தொடர்பு உலகறிந்த ரகசியம்.
காந்தியின் படுகொலைக்கு சர்தார் பட்டேலும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணனும், பி.ஜி.கோஷும் பகிரங்கமாகவே அறிவிக்கின்றனர். இந்திய பாகிஸ்தான் பிரிவினையை இறுதிவரை எதிர்த்த அபுல்கலாம் ஆசாத்தும் அறிவிக்கிறார்.
“இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா” என அன்றைக்கே கவுண்டமணி பாணியில் சொன்ன சர்தார்பட்டேல் அதற்கு சொன்ன காரணம் என்ன தெரியுமா?
“இத்தகைய குற்றச்சாட்டுகள் எல்லாம் மகாகனம் பொருந்திய காங்கிரஸ் பேரியக்கத்தை பலவீனப்படுத்துவதற்காக எதிரிகளால் சொல்லப்படுபவை. காந்திஜி மீது எனக்கு இருக்கும் விசுவாசம் உறுதியானது. அவரது மறைவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கட்சி ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.” என்று காங்கிரஸ் ”காரிய” கமிட்டிக் கூட்டத்தில் முழங்கினார் பட்டேல்.
இன்றைக்கும் எதிர்க்கட்சி ஆட்சிகளின் ”கதை” முடிக்கவோ அல்லது “கதை” முடிந்ததுமோ “காரியம்” செய்வதற்காக காரியக் கமிட்டியைக் கூட்டுவதுதானே அப்பேரியக்கத்தின் தொட்டில் பழக்கம்? இன்றைக்குப் போலவே அன்றைக்கும்  நடந்ததில் அதுவும் ஒன்று.
காங்கிரசை அறிந்தவர்கள் பட்டேலின் நதிமூலத்தை அறிவார்கள்.
பிஜெபி.யை அறிந்தவர்கள் இந்து மகாசபையின் நதிமூலத்தை அறிவார்கள்.
இன்னமும் புரியலேன்னா……
இன்றைய பிஜெபி.தான் நேற்றைய காங்கிரஸ்.
அல்லது நேற்றைய காங்கிரஸ்தான்
இன்றைய பிஜெபி.
மொத்தத்தில்…….
நடிகர் அர்ஜுனின் சினிமாக்களில் வருவது போல குத்திட்டு நிற்கும் “தேசபக்தி”……
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக தொடைதட்டிக் கொண்டு விடும் சவால்கள்…….
வெண்டைக்காய் மொழிக் கொள்கை…….
மாநிலத்துக்கு மாநிலம் மரம் தாவும் மகத்தான ”தேசியக்” கொள்கை…..
அது தடாவைக் கொண்டு வந்தால்……
இது பொடாவைக் கொண்டுவரும் சனநாயகச் சாக்கடைக் கொள்கை…….
என எல்லாவற்றிலும் இரண்டுமே ஒரே கொடியில் பூத்த இரு மலர்கள்தான்.

நீதி வெல்லட்டும்.


பேரறிவாளன்

அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்து கொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு கண்கள் என அறிமுகம் செய்துகொள்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறெல்லாம் அறிமுகம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இருந்தாலும் எனது விருப்பத்திற்கு மாறான அறிமுகம் ஒன்று என்மீது திணிக்கப்பட்டுள்ளது. அதுவே, ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தூக்குத் தண்டனை கைதி அ.ஞா. பேரறிவாளன். ஆம். இதுவே எனது இன்றைய தவிர்க்கமுடியாத அடையாளம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உங்களைப்போலவே தெருக்களில் திரிந்த சாதாரண மனிதனை திடீரென பயங்கரவாதியாக, கொடூர கொலைகாரனாக சித்தரித்தது பேரவலமாகும். ஒரு தமிழனாகக் கூட அல்ல; ஒரு மனிதனாக சக மனிதர்கள் துன்பத்தில் உழல்வது கண்டு துடித்தெழுவதும் கொலைக்குற்றமாகிவிடும் என ஒரு நாளும் நான் எண்ணியதில்லை.
உங்களுக்கு ஒன்றை வெளிப்படையாக நான் சொல்ல விரும்புகின்றேன். எனது வாழ்வின் எந்த நிலையிலும் ராஜிவ் காந்தியை மட்டுமல்ல; எந்த மனிதரையுமே கொல்ல கடமையாற்றியதும் இல்லை. அதுகுறித்து மனதளவில் கருதிப் பார்த்ததும் இல்லை. நான் நேசித்து ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார் தந்த சுயமரியாதை கொள்கையும் பார்ப்பன எதிர்ப்பும் என்னை கொலைகாரனாக சித்தரிக்க ஆதிக்கச் சக்திகளுக்குக் கிடைத்த முதல் ஆயுதம் எனில் தொப்புள் கொடி உறவாம் ஈழத்தமிழினம் மேற்கொண்ட தற்காப்புப் போர்மீது கொண்ட  என் தீராப்பற்று அடுத்த காரணமாயிற்று.
மின்னணுவியல்  மற்றும்  தகவல் தொடர்பியலில் பட்டயக்கல்வி ( Diploma in Electronics and Communication ) முடித்திருந்தேன் என்ற ஒரே காரணத்தால் புலனாய்வுத் துறையினரின் நெருக்கடிக்கு ஆட்பட்டு 19 வயதில் நான் ஒரு வெடிகுண்டு நிபுணராக செய்தி ஊடகங்களால் சித்திரிக்கப்பட்டேன். ஆனால் அந்த வெடிகுண்டு குறித்து இன்றுவரை புலனாய்வு செய்யவே முடியவில்லை என்கிறார் வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்து  ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி கே. ரகோத்தமன்.
ராஜிவ் கொலையில் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 17 பேருக்கு ‘தடா’ சட்டத்தின்கீழ் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அந்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையும் பதிவு செய்தவர் அப்போது நடுவண் புலனாய்வுத் துறையின் கொச்சி பிரிவு காவல் கண்காணிப்பாளர் தியாகராஜன். இவரது நம்பகத்தன்மையை விளக்க கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரி அபயா கொலையுண்ட வழக்கு போதுமானது. 1993 ஆம் ஆண்டு நடந்த அபயா கொலையினை ‘தற்கொலை’  என முடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதால், அவருக்குக் கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் தாமஸ்வர்கிஸ் தனது பதவியையே துறந்தார். 16 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு அக்கொலை வழக்கு துப்பறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு அருட்சகோதரியின் வழக்கிலேயே சிலரைக் காப்பாற்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்துள்ளார் எனில், ராஜிவ் கொலை போன்ற பெரிய வழக்கில் எவ்வாறெல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தை இவர் தயார் செய்திருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
20 ஆண்டுகளுக்கு முன்னர் என்மீது பூசப்பட்ட கொலைகார சாயம் இன்று மெல்ல மெல்ல வெளுத்து வருகிறது. ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும் விசாரணையின் முடிவில் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரக்கூடும். விடுதலை பெற்ற இந்தியாவிலும் சரி, அதற்கு முன்னர்  அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவிலும் சரி, இதைவிட மனிதநேயத்திற்கு ஒவ்வாத சட்டமே இல்லை எனக் கூறும் அளவிற்கு கொண்டு வரப்பட்ட தடா எனும் கொடூரச் சட்டத்தின் துணைகொண்டு ஒரு பெருங்கதை என் போன்ற அப்பாவிகளுக்கு எதிராக புனையப்பட்டது. இறுதியில் ராஜிவ் காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என உச்சநீதிமன்றம் முடிவுக்கு வந்த பின்னர், அச்சட்டத்தின் கொடிய பிரிவுகளை மட்டும் பயன்படுத்தி என்னை தண்டித்துவிட்டது. தனக்கு ‘மாமூல்’ தரவில்லை என்ற ஒரே காரணத்தால் நடைபாதை கடை வியாபாரி ஒருவனை பயங்கரவாதி யென அறிவித்து ‘தடா’ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த கொடுமை வடமாநிலம் ஒன்றில் நடந்தேறியதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
சாதாரண பெட்டிக் கடையில் கிடைக்கும் 13 ரூபாய் மதிப்பிலான பேட்டரி செல் இரண்டு வாங்கித் தந்ததற்காக ஒரு மனிதனுக்கு தூக்கு வழங்கப்படுமெனின், அவனது 20 ஆண்டுகால இளமை வாழ்வைப் பறிக்க முடியுமெனின் இவ்வுலகில் நீதியின் ஆட்சி குடிகொண்டிருக்கிறதா என்ற ஐயப்பாடு எழுகிறது. ஆம். அரசியல் சதுரங்கத்தில்    அரண்மனை  கோமான்களைக் காக்க வெட்டுப்பட்ட சிப்பாயாக வீழ்ந்து கிடக்கிறேன்.
எனது வழக்கில் மூடிமறைக்கப் பட்ட உண்மைகளை விளக்கி நான் எழுதிய கடிதங்கள் “தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்”  என்ற பெயரில் நூல் வடிவில் வெளியிடப்பட்டு துவரை தமிழில் மட்டும் 6 பதிப்புகளாக 11,700 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளது. தற்போது மே 18 அன்று வேலூரில் ஏழாம் பதிப்பு வெளிவரவுள்ளது. ஆங்கில மொழி யில் 3500 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் அதன் இந்திப் பதிப்பு மிக அண்மையில் வெளிவர உள்ளது. இவையெல்லாம் மிக தாமதமாகவேனும் உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.
உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும் மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர். கிருட்டிண அய்யர், எனது குற்றமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு மேதகு குடியரசுத் தலைவர் அவர் களுக்கும் மாண்புமிகு தலைமை அமைச்சருக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், திருமதி சோனியா அவர்களுக்கும் எழுதிய கடிதங்கள் எனது நீண்ட வலிமிகுந்த போராட்டத்திற்கான வெற்றிகளாகும். மும்பை உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் எச். சுரேஷ் அவர்களின் கடிதமும் எனது ஊர் சட்டமன்ற உறுப்பினரின் கடிதமும் எனது பள்ளி ஆசிரியர், எனது ஊர் பொதுமக்களின் ஆதரவான செயல்பாடுகளும் உடைந்துபோன என் உள்ளத்திற்குக் கிடைத்த அருமருந்தாகும்.
எனது வேண்டுகோளெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ராஜிவ் காந்தியை அரசியல்வாதியாக விமர்சனம் செய்கிறவர்களை மட்டுமல்ல; அவரை மிக ஆழமாக நேசிக்கும் மனிதர்களையும் நான் கேட்க விரும்புவதெல்லாம் ராஜிவ் காந்தி யின் உயிர்ப் பலிக்கு ஈடாக அக் குற்றத்தில் எப்பங்கும் வகிக்காத குற்றமற்ற ஒரு மனிதனின் உயிர் பலியிடப்பட வேண்டுமா? அவ்வாறான அநீதிக்கு மனித நேயமிக்க நீதிமான்களான நீங்கள் உடன்படமாட்டீர்கள் என நம்புகிறேன்.
அன்பிற்குரியோரே! அரசியல் செல்வாக்கும், பணபலமுமற்ற இந்த சாமானிய மனிதனின் உண்மைக் குரலின் பக்கம் சற்று உங்கள் செவிகளைத் திருப்புங்கள். என் தரப்பு உண்மைகள் உங்கள் உள்ளத்தின் ஆழத்தைத் தொடுமெனில், எனது விடுதலைக்காக உங்கள் வலிமை யான குரல்கள் எழட்டும். குற்றமற்ற கடைக்கோடி மனிதனின் உள்ளக் குமுறலை உலகம் புரிந்து கொண்டது என வரலாறு குறிக் கட்டும்.
நீதி வெல்லட்டும்.
 நன்றி : சண்டே இந்தியன் – மே 18 – 2011

அணு உலை

அந்தக் காலத்துல எங்க அப்பத்தா நெலாவைக் காட்டித்தான் சோறு ஊட்டும். அப்பறம் நெலாவைப் பாம்பு முழுங்கறது… பாம்பைப் போட்டு கடலைக் கடையறது… அப்பிடி இப்பிடின்னு கதையெல்லாம் சொல்லும். கொஞ்சம் பெரிசாக பெரிசாக நம்மூர்ல பெரியார் வேற மூலமூலைக்கு நின்னுகிட்டு “அடப் பைத்தியக்காரா! நெலாவென்ன லட்டா? ஜிலேபியா? பாம்பு வந்து முழுங்கறதுக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கடா முட்டாப்பசங்களா…”ன்னு கன்னா பின்னான்னு திட்டீட்டு இருந்தது புரிய ஆரம்பிச்சுது.


பத்தாததுக்கு திடீர்ன்னு ஒரு நாள் உங்கள மாதிரி நாலு பெரிய மனுசனுங்க சேந்து நெலாவுலயே போய் குதிச்ச சேதி கேட்டதுமே சின்ன வயசுல கேட்ட சமாச்சாரங்க மேலெயெல்லாம் சந்தேகம் பொறந்துடுச்சு.



இருந்தாலும்  பாருங்க….
இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

ஆனாலும் நம்மூர் பசங்கள நம்ப முடியாது. ஏதாவது புளுகுனாலும் புளுகுவானுகன்னு தெரிஞ்சுதான் இந்தக் கடுதாசிய எழுதறேன்.
அதென்னவோ கூடங்குளத்துல அணு உலையக் கொண்டுவரப் போகுது நம்ம கவர்மெண்டு… அது வந்தா ஊரே காலியாயிடும்…. புல் பூண்டு கூட மொளைக்காது….ன்னு மொளச்சு மூணு எலை கூட உடாத பசங்கெல்லாம் பேசீட்டுத் திரியுதுங்க. ஏங்க அணு ஒலை நம்ம விஞ்ஞானத்துக்கு எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய கெவுர்த்தி. இதப் புரிஞ்சுக்காம ஆபத்து கீபத்துன்னு அளந்துகிட்டு இருக்கானுங்க சிலபேரு. ஆனா அவனுக சொல்றதுலயும் ஒண்ணு ரெண்டு நல்லது இருக்கத்தான் செய்யுதோன்னு ஒரு சந்தேகங்க….
அமெரிக்காவுல என்னமோ இந்த ஒலைகளை வருசத்துக்கு கொறஞ்சது அறநூறு தடவையாவது மூடறானுங்களாமா? ஏங்க மூடறதுக்காகவா தொறக்கிறது? ஒரு எழவும் புரிய மாட்டேங்குதுங்க. ஏதோ உங்கள மாதிரி வெவரம் தெரிஞ்ச நாலுபேரு வெளக்கிச் சொன்னாத்தானே எங்குளுக்குப் புரியும்.
“அது” வந்தா இந்த நாட்டுக்கே வெளக்குப் போடலாம்… பேக்டரி ஓட்டலாம்….ன்னு சொல்ற ஆளுங்களும் இருக்காங்க. அப்புறம் என்னங்க இந்த நாட்டுக்கே வெளக்கு வருதுன்னா ஒரு ஊரு செத்தாத்தான் என்ன? அதுவும் பொதைக்கற வேல மிச்சம்னு சொல்றாங்க. அப்படியே சாம்பலாயிருமாமா? தூக்கற வேலயும் இல்ல… பொதைக்கற வேலயும் இல்ல.
ஒரு நாட்டுக்கு கரண்டு கெடைக்குதுன்னா ஒரு ஊரையே கொளுத்தலாம்…. இந்த ஒலகத்துக்கே கரண்டு கெடைக்குதுன்னா ஒரு நாட்டையே கொளுத்தலாம். எத்தன பேரு பஸ்சுலயும் ரயில்லயும் அடிபட்டுச் சாகறானுங்க… இதுல செத்தா எவ்வளவு கவுரவம். விஞ்ஞானத்துக்காக செத்தவன்னு பேராவது மிஞ்சுமில்லீங்களா?
இருந்தாலும்  பாருங்க….
இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….
அதென்னவோ அப்பிடிக் கிப்பிடி இந்த ஒலை வெடிக்கறமாதிரி தெரிஞ்சா ராவோட ராவா ஊர்சனத்த வேற தூரத்து ஊருக்கு கொண்டுபோற அளவுக்கு நெறைய பாதுகாப்பு சமாச்சாரமெல்லாம் செஞ்சிருக்கோம்; அதனால யாரும் பயப்பட வேண்டாம்னு கவர்மெண்டு சொல்றதா கேள்விப்பட்டேங்க. இதுலதாங்க ஒரு சின்ன சந்தேகம்….. என்னடா இது இவனே இப்பிடிக் கேக்கறானேன்னு கோவுச்சுக்கக் கூடாது.
ஏங்க நம்மூர் மூலைல தீப்புடிச்சாலே இந்த பயருசர்வீசு வர்றதுக்கு ஏழு மணி நேரமாவுது….. வந்தாலும் தண்ணி வந்தா பைப்பு கழுண்டுரும்…. பைப்பு செரியா இருந்தா தண்ணி வராது…. எல்லாஞ் சேந்து வர்றதுக்குள்ள தீ தானா அணஞ்சுரும். அப்புறம் எப்பிடீங்க இந்த ஒலைல ஏதாவுதுன்னா நாங்க உங்கள நம்பீட்டு உக்காந்திருக்கிறது? ஏதோ கேக்கோணும்னு தோணுச்சு கேட்டுட்டேன்…. சரி அத உடுங்க….
உலைல கெடக்கற கசடாமா….? அது பேரு புளூட்டோனியமோ என்னமோ…. அதுல இருந்து ஏதோ சக்தி வெளியே வந்துட்டே இருக்கும்னு சொல்றாங்க. அந்தக் காத்து நம்ம மேல பட்டாலேயே கண்ட கண்ட நோவெல்லாம் வரும்னு சொல்றாங்களே…. இது நெசந்தாங்களா?
ஆனா அதுக்கும் வழி இருக்கிறதா நம்மூர்ல பேசிக்கிறாங்க. அந்தக் கசட பத்திரமா எடுத்துட்டுப்போயி பொதைச்சிருவாங்க…. இல்லேன்னா நம்ம நாயர் கடை பார்சல் மாதிரிப் பண்ணி கடலுக்குள்ள  கடாசிருவாங்கன்னு கேள்விப்பட்டேன்.
உங்குளுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு….
நீங்குளுந்தான் இந்த சனங்க உசுரக் காப்பாத்தறதுக்காக தலைல இருக்குற மசிரெல்லாம் போயி பாடாப்படறீங்க….
இருந்தாலும்  பாருங்க….
இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….
கசடைத் தூக்கி கடலுக்குள்ள போட்டா என்னைக்காவுது அதுல ஓட்டை விழுந்துச்சுன்னா மீனெல்லாம் சாகும்…. அதத் தின்னா நம்ம சனமெல்லாம் சாகும்னு சொல்றானுகங்க. ஏங்க….  இவனுக மீன் புடிக்க வேற எடமே கெடைக்காதா….? கடல்தான் கெடைச்சுதா….? ஏன் நம்மூர் வாலாங்கொளம் மாதிரி வேற ஏதாவது கொளத்துல மீன் புடிச்சா போதாதா….? அப்பிடி அதுலயும் தீந்து போச்சுன்னா நம்ம கெவர்மெண்டே ஊருக்கு ஏழு கொளம் வெட்டி அதுக்குள்ள மீனைக்கொட்டி நம்ம “பஞ்சாயத்து ராசு” மாதிரி “மீன் ராசு”ன்னு ஒரு திட்டம் கொண்டாந்தா எல்லாம் செரியாயிடுங்க…. இது புரியாம இவனுங்க…..
என்னமோ…. எந்த உலையா இருந்தாலும் முப்பதே வருசந்தான் ஆயுசு…. அதுக்கு அப்பறம் அதை சமாதி மாதிரி காங்கிரீட்டு போட்டு மூடி காவல் வேற வெக்கணும்…. அதக் கட்டறத விட மூடறதுக்கு பல மடங்கு செலவாகும்…. அப்பிடீன்னெல்லாம் சொல்றாங்க…. அதிலிருந்து வர்ற கதிரியக்கக் காத்தாமா….. அதுவேற பத்தாயிரம் வருசம் வரைக்கும் அடிக்கும்னு வேற சொல்றாங்க…. அப்ப ஒண்ணு பண்ணுங்க….. “kaanguraskku  ”  ஓட்டுப் போடாத ஊராப் பாத்து உலையை ஆரம்பிச்சிருங்க….
அது ஓடவும் வேண்டாம்….
அத மூடவும் வேண்டாம்….
ஒரேடியா அந்த ஊரையே மூடீறலாம். இப்பிடியே ஒவ்வொரு ஊரா மெரட்டுனா போதுங்க…. அப்புறம் ஊரென்ன…… நாடே நம்ம கைல….. ஏன்…. இந்த உலகமே நம்ம கைல… எப்புடி நம்ம “ஐடியா”?
இந்தக் கடுதாசிய எழுதி முடிக்கறப்ப இன்னொரு சமாச்சாரம் கைக்குக் கெடைச்சதுங்க. அதுவும் நீங்களே எழுதி  வெளியிட்டதுங்க. ஆனா…. அது கெடைச்சப்பறந்தாங்க கொளப்பமே அதிகமாயிடுச்சு…..
தப்பித்தவறி உலைல இருந்து கதிரியக்கம் கெளம்பீடுச்சுன்னா…..ஜீப்புல மைக்கக் கட்டீட்டு ஊர் ஊராப் போயி தெரியப்படுத்துவோம்னு போட்டிருக்கீங்க…..
ஏங்க….. கதிரியக்கம் கெளம்பீருச்சுன்னு தெரிஞ்சவுடனே எந்தப் பயலாவது ஜீப்பை ஊருக்குள்ள ஓட்டுவானுங்களா…..? இல்ல ஊரை உட்டே ஓடுவானுங்களா….?
சரி….. அது கெடக்கட்டும்…. அப்புடி என்னாவது சந்தேகம்னா அவுங்கவுங்க ஊட்டு ரேடியோப் பொட்டியையும், டீவீப் பொட்டியையும் தெறந்து கேளுங்கன்னு போட்டிருக்கீங்க…..
ஏங்க…. இந்த நாட்டுல என்னைக்காவுது  டீவியும் ரேடியோவும் உண்மை பேசி கேட்டுருக்கீங்களா? பெரியவர் செயப்பிரகாசு நாராயணன் குண்டுக் கல்லாட்டம் உயிரோட இருந்தப்பவே நம்மூர் ரேடியோ அவரைக் கொன்னு போட்டுது. ஊர்ல ஏதாவது பிரச்சனை….. கடையடைப்புன்னா….. ரோட்டுல திரியற கழுதை….. மாடு…. இதையெல்லாம் பாத்துட்டு உங்க ஆளுங்க பஸ்சுகள் பறந்தன….. ரயில்கள் மிதந்தன…. ”மாமூல்” வாழ்க்கை கெடவில்லை….ன்னு கப்சா உடுவாங்க. இந்த லட்சணத்துல நீங்க டீவீயையும் ரேடியோவையும் கேக்கச் சொல்றீங்களே….. இது உங்குளுக்கே நாயமாப் படுதா…..? வேண்ணா ஒண்ணு பண்ணச் சொல்லுங்க….. டீவீலயும் ரேடியோவுலயும்….உலைகள் பத்திரமாஇருக்குகதிரியக்கம் துளிக்கூட வெளியேறல….” அப்பிடீன்னு சொல்லச் சொல்லுங்க…. அப்பத்தான் சனங்க துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஊரைக் காலி பண்ணுவாங்க.
சரி…. இதுவும் கெடக்கட்டும்….. ஊட்டுல இருக்குற சன்னல்…. கதவையெல்லாம் இறுக்கமா மூடீட்டு உள்ள இருக்கச் சொல்றீங்க…..
சரிதான்…. ஆனா இங்க சனங்க ஊடே இல்லாம நாயும் பன்னியும் மாதிரி பசில பராரியா சுத்தீட்டு இருக்குறப்ப எப்புடீங்க ஊட்டுக்குள்ள பூந்து கதவச் சாத்தறது…..சன்னலை மூடறது? கண்டவன் ஊட்ல பூந்தா கதவச் சாத்த முடியும்? அப்பிடியே ஊடே இருந்தாலும் ஓடே இல்லாம….. மழை வந்தா தலைக்கிட்டயும் கால்கிட்டயும் கக்கத்துலயும் ஓட்டைச் சட்டிகளை வெச்சுட்டுக் கெடக்குற எங்கள மாதிரி சனங்க எதப்போயி அடைக்கிறது? எதப்போயி மூடறது? அப்படீன்னா…. ரோட்டோரமாப் படுக்குறவனும்….. பாட்டுப்பாடிப்     பொழைக்கிறவனும்…..    கழைக்கூத்தாடியும்……. எங்க போயி ஒடுங்குவாங்க…..? யார் ஊட்ல பதுங்குவாங்க…..?
இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் நம்ம நாட்டுக்கு அவமானமா இருக்குதுன்னு ஒருவேளை இந்தத் திட்டமோ என்னவோ…. ஆனா இதுக்குப் பதிலா ஊடில்லாம இருக்குற இதுகள ஓட்டீட்டுப் போறதை விட உலைக்குள்ளயே தூக்கிப் போட்டா…. ஏழ்மைய ஒழிச்ச மாதிரியும் இருக்கும்…. ஏழையவே ஒழிச்ச மாதிரியும் இருக்கும்.
இருந்தாலும் உங்குளுக்கு நல்ல மனசுங்க.
எது எப்பிடியோ ஊரைச் ”சுத்தம்” பண்றதுன்னு நீங்க தீர்மானிச்சாச்சுன்னா அதுக்கு “அப்பீலே” கெடையாதுங்க. அந்தக் காலத்துல பிளேக் நோவு வந்து ஊரையே தூக்கீட்டுப் போனாப்பல இந்தக் காலத்துல பிளேக்குக்கு அப்பனா அணு உலை வருது.
இந்த மடம் இல்லைன்னா வேற எந்த மடமாவது போக வேண்டியதுதான்….
அதுக்கும்….
உங்க விஞ்ஞானம்…..
உசுரோட உட்டு வெச்சா….
நன்றி பாமரன்.

கிரகாம்பெல்


இன்றைக்கு பயங்கரவாத எதிர்ப்பு அவதாரம் எடுத்திருக்கும் காந்தியின் மறு உருவான ஒபாமா  சித்தப்பா என்றோ…
அல்லது,
அமெரிக்காவினது வெளியுறவு அமைச்சராகவே ஆகிவிட்ட டோனி பிளேயரது பேரன் என்றோ…
மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டியதில்லை யாரும்.
இந்த ‘பெல்’…
நீங்கள் நினைக்கும் அதே ‘பெல்’ தான்.
அந்த பெல் உருவாக்கிய ‘பெல்’லால் வந்ததுதான் இத்தனை வம்பும்.
எதை நினைத்து இதைக் கண்டுபிடித்தாரோ கிரகாம்பெல். ஆனால் அதை நினைத்து இங்குள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவதில்லை என்பது மட்டும் உறுதி.
டி.வி.யின் எந்தச் சேனலைத் திறந்தாலும்… கெக்கே பிக்கே என்று இளித்துக் கொண்டோ… ‘மாரியாத்தா’ வந்ததைப் போல கையைக் காலை உதறிக் கொண்டோ காம்ப்பியர்களின் தரிசனம்தான் (அதாவது தொகுப்பாளினிகள்)  மதுரையிலிருந்தோ… பம்பாயிலிருந்தோ… துபாயிலிருந்தோ… ‘போராடிக் களைத்த’ தமிழர்கள் இவர்களுக்கு ‘போன்’ போட்டு…
‘இந்தப் படத்திலிருந்து ஒரு பாட்டு…
அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி…
அதற்கு இதுகளும் பதிலுக்கு வழிந்துவிட்டு அபத்தமான அஞ்சாறு விஷயங்களைப் பேசிய பிறகு… ஏதோ பல வருடங்கள் ஒரே தட்டில் இருவரும் சாப்பிட்டு ஒரே பாயில் படுத்துத் தூங்கியதைப்போல போலியான அன்யோன்யத்துடன் கேள்விகளை அள்ளி வீசுவார்கள்.



சாப்பிட்டு ஜீரணம் ஆகாத ஒரு கூட்டம்… இதற்கென்றே அலைவதையும், இந்த அஃறிணைகளுக்குப் ‘பொறுப்பாக’ பதில் சொல்லி ‘அறிவுபூர்வமாக’ கேள்வி கேட்டு… கேட்ட பாடலை ஒளிபரப்புவதற்கென்றே ஒவ்வொரு டி.வியிலும் ஆட்களை வைத்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்கும்போது நாம் தமிழகத்தில் இருக்கிறோமா இல்லை ‘பாண்டி மடத்தில்’ இருக்கிறோமா என்கிற பெரும் சந்தேகம் எழுந்து தொலைக்கிறது.
பாடலைப் போடுவதற்கு முன் இந்த ஜென்மங்கள் அந்தப் பெண்களிடம் உளறும் உளறல் இருக்கிறதே… அய்யோடா…

***
இந்த பாட்டை கேக்குறீங்களே… யாரையாவது லவ் பண்றீங்களா…?
ஐய்யய்யோ இல்லீங்க.
ஏன் சார் லவ் பண்றது தப்பா…?
தப்பில்லைதான்… ஆனால். பென்சன் வாங்கற காலத்துல வீணா எதுக்குமா அதெல்லாம்…?
***
தமிழகம் தொழில் வளர்ச்சியில் எத்தனாவது இடத்தில் இருக்கிறது…
அவசியமில்லை…
தமிழகம் கல்வி வளர்ச்சியில் எத்தனாவது இடத்தில் இருக்கிறது…
அவசியமில்லை…
எத்தனை இளைஞர்கள் வேலை கிடைக்காது பூச்சி மருந்திலும், ரயில் தண்டவாளங்களிலும் தன் உயிரைப் போக்கிக் கொண்டு இருக்கிறார்கள்…
அவசியமில்லை…
எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைக்கும், வரதட்சணை வேட்டை நாய்களுக்கும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்…
அவசியமில்லை…
ஆனால்… ‘போக்கிரி ’ படப்பாடலோ ‘களவானி’ படப் பாடலோ இந்த வாரம் எந்த இடத்தில் இருக்கிறது என்பது தான் ரொம்ப முக்கியம்.
இப்படிப் போகிறது இவர்களது பொழுதுகள்.
நமது கவலை… நமது கோபம்… எல்லாம் கிரகாம்பெல் மீது திரும்புவது நியாயமில்லைதான்.
ஆனால் அத்தியாவசியத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இக்கருவி ஆடம்பரத் தேவைகளுக்காகவும் பொறுப்பற்ற விஷயங்களுக்காகவும் பயன்படுவதற்கு நமது தொலைபேசித் துறையும் துணை போகிறதே என்கிற கோபம் எழுவது எந்த விதத்திலும் தவறாகாது.
கம்ப்யூட்டருக்கும் அதே கதிதான் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் கையில் கம்ப்யூட்டரைக் கொடுத்தால் ஜோசியம்தான் பார்க்கிறார்கள்.
யுனிக்ஸ், ஜாவா, ஆரக்கல், ஆட்டுக்கல் எல்லாம் அத்துபடியில்லை என்றாலும் ஓரளவுக்காவது கம்ப்யூட்டர் தெரிந்தவன் என்ற முறையில் சொல்வதானால்…
இரு உயிரினங்களுடைய பிறந்த தேதி – இடம் – நேரம் இவற்றைக் கொடுத்தால் அது உடனடியாக கணித்துக் கொடுக்கும் என்பது உண்மைதான். ‘பதிமூன்று பொருத்தங்களும் பொருந்திப் போகிறது. கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தலாம்’ என்று கன கச்சிதமாகச் சொல்லும் என்பதும் உண்மைதான். அந்த இரண்டில் ஒன்று ஒரு நாயுடையதாக இருந்தாலும் அதன் பதில் இதுதான் 
இந்த ‘தேச பக்தர்களை’ கட்டாய ராணுவ சேவைக்கு இழுத்துக் கொண்டுபோய் எல்லையில் நிறுத்தி விடுவது எவ்வளவோ மேல்.
திரும்பி வந்தால் வீட்டுக்கு.
வராவிட்டால் நாட்டுக்கு.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஈ.வே.ராமசாமி.



நினைவிருக்கிறதா நண்பா உனக்கு…?
ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு…
சில பழந்துணிகளைத் தோளில் தொங்கும் மூட்டையில் திணித்துக்கொண்டு
மலையாள தேசம் நோக்கி நடைபோட்ட நம் நண்பனை…?
அவன் போன காரியம் என்னவென்பது புரியுமா உனக்கு?
அந்த நண்பன் போய்ச் சேர்ந்த பிற்பாடு
தனது துணைவியையும் துணைக்கு அழைத்துக்கொண்டான்.
அது போதாதென்று அவனது தங்கையும் அப்புறம் போய்ச் சேர்ந்தாள்.
அவன் போனது…
கள்ளிக்கோட்டையின் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக அல்ல.
அவன் துணைவி போனது எர்ணாகுளக் கரையோரங்களில் படகுகளில் பவனி வருவதற்கும் அல்ல.
அவனது தங்கை பயணப்பட்டது அவர்கள் இருவருக்கும் பேச்சுத் துணைக்காகவும் அல்ல.
அந்த நண்பனின் பெயர் நினைவுக்கு வருகிறதா உனக்கு?
அவன் பெயர்: ஈ.வே.ராமசாமி.
துணைவியின் பெயர்: நாகம்மை.
தங்கையின் பெயர்: கண்ணம்மா.
அவர்கள் அனைவருமே பயணப்பட்டது….
வைக்கம் மண்ணின் மக்களது சமூக இழிவைப் போக்குவதற்காக.
‘வைக்கம் தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடமாடக்கூட கூடாது’ என்கிற அவலத்தை அழித்து ஒழிப்பதற்காகத்தான் பயணப்பட்டான் அவன்.
அடக்கு முறையையே ஆயுதமாகக் கொண்டவர்கள் அவனை அடைத்து வைத்தனர். அழைப்பு விடுத்தான் அவனது துணைவிக்கு.
அடுத்த கட்டப்போராட்டத்தில் அணி சேர்ப்பதற்கு.
வந்த அவரும் விலங்கிடப்பட்டார்.
அடுத்ததாக வந்த அவனது தங்கை கண்ணம்மாவும் கைதாகி,
சிறையின் சுவர்களை செருக்குறச் செய்தனர்.


திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மட்டுமே எழுதிப் பழகிய அந்த ஈரோட்டுக் கிழவனது போராட்டங்களால்தான் நம்மில் பலர் இன்று பட்டதாரிகளாகவும், பெரிய பெரிய பொறுப்புகளிலும் அமர்ந்திருக்க முடிகிறது.
அவன் அன்று கருப்புச்சட்டை போட்டிராவிட்டால் நம் தலைமுறை இன்று வெள்ளைச்சட்டை அணிந்திருக்க முடியாது.
அந்தக் கிழவன் போராடியிருக்காவிட்டால் அன்று கூனிக்குறுகி கக்கத்தில் இடுக்கியிருந்த துண்டை நாம் இன்று நமது தோள்களுக்கு மாற்றி கம்பீரமாக நடை போட்டுக் கொண்டிருக்க முடியாது.
படிப்பறிவில்லாத பெரியார் அன்று போர் முரசு கொட்டாது இருந்திருந்தால் இன்று காதல் திருமணங்களும், சாதி மறுப்புத் திருமணங்களும், கைம்பெண்களது மறுமணங்களும் சாத்தியப்பட்டிருக்காது.
ஆம் ஒவ்வொரு சமூக மாற்றத்தின் பின்னணியிலும் ஒரு சுயமரியாதைக்காரனின் ரத்தம் சிந்தப்பட்டே வந்திருக்கிறது.

“ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்றால் இறைத் தலங்களில் மட்டும் ஏனடா இந்தப் பாகுபாடு?” என்று பெரியாரிடமிருந்து ஓங்கி ஒலித்தது அந்தக் குரல்.


அந்த ஈரோட்டுக் கிழவன் போட்ட போட்டில்தான் விழித்துக் கொண்டது. அவன் ஆத்திகர்களுக்கும் சேர்த்துப் போராடினான். சமத்துவமற்ற சமயத் தலங்களை சனநாயகப் படுத்துவதில் முன்னணி வீரனாய் நின்றான்.



ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..
வைக்கம் நகரத்து வீதிகளில் ஒடுக்கப்பட்ட ஆத்திகர்கள் நடமாடியிருக்கவே முடியாது.
கோபுரத்தை மட்டுமே கும்பிட்டுச் சென்றவர்கள் கோயிலுக்குள் கால் வைத்திருக்க முடியாது.


”ஆலயங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்கிற குரல் உரக்க எழுந்திருக்க முடியாது.


பெண்கள் வழிபடுவதற்கே பிரஸ்னம் பார்த்து குறி சொல்லிக் கொண்டிருக்கும் ”கேரள ஏட்டன்மார்களுக்கு” நடுவே வழிபடுவது மட்டுமல்ல….. பெண்கள் வழிபாடே நடத்தலாம் என்கிற நெத்தியடி மேல்மருவத்தூர் வழிமுறைகள் தோன்றியிருக்க முடியாது.



தெருநுழைவுப் போராட்டம்……
கோயில் நுழைவுப் போராட்டம்…..
கருவறை நுழைவுப் போராட்டம்……
சாதிபேதமற்ற வழிபாட்டு உரிமைக்கான போராட்டம்………
என எண்ணற்ற போராட்டங்களை இம்மண்ணில் அவர் நடத்தியிருக்காவிட்டால்
“போங்கப்பா நீங்களும்….. உங்க ஆத்திகமும்” என்று துண்டை உதறித் தோளில் போட்டு விட்டுப் போயிருப்பார்கள் பலர்.

ஆம்.
பெரியார் நாத்திகர்களுக்கு  மட்டுமில்லை
ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்.





தங்கபாலுக்களும்…… இளங்கோவன்களும்


காங்கிரஸ் ஏற்பட்டபிறகுதான் மக்களுக்குத் தேசத்துரோகம் செய்து வாழ வேண்டிய அவசியமே ஏற்பட்டது. இப்போது மக்கள் ஒவ்வொருவரும் வாழ வேண்டுமானாலும்…… சிறப்பாக அயோக்கியர்கள் வாழ வேண்டுமானாலும்…… உத்தியோகங்களை விட காங்கிரசுதான் தக்க இடமாக இருந்து வருகிறது. -தந்தை பெரியார் – 1927.
ஊருக்கு மூணே பேர் இருந்தாலும் இந்தக் காங்கிரஸ் அலப்பரைக்கு மட்டும் அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. காகிதப்பஞ்சமே வந்துவிடக் கூடிய அளவிற்கு அறிக்கைப் “போர்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதன் சர்வ கோஷ்டித் தலைவர்களும். சீமான் – கொளத்தூர் மணி – மணியரசன் கைது…… விடுதலைச் சிறுத்தைகள் பேனர் கிழிப்பு…… சத்தியமூர்த்தி பவனில் செருப்படி…… சிபிசிஐடி விசாரணை…… என அல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது தமிழகம். ஆனால் சத்தியமூர்த்தி பவனைப் பொறுத்தவரையில் இந்த முறை மட்டும் ஒரே ஒரு வித்தியாசம்தான். இதுவரைக்கும் தங்களது சொந்தக் கட்சியின் தலைவர்களையே வேட்டியை உருவி ஓடவிடுவது…… தங்களது தலைவர்களின் கொடும்பாவிகளை தாங்களே கொளுத்துவது…… சரமாரியாய் செருப்பாலடித்து “முதல்” “மரியாதையை” அளிப்பது என்பதெல்லாம் தங்களுக்கே உரித்தான பிறப்புரிமை என்றிருந்தவர்களுக்கு மற்றவர்கள் இதில் பங்குக்கு வந்தால் கோபம் வராமல் என்ன செய்யும்?
ஆனால் காவிரியில் கர்நாடகம் நீர் விட மறுக்கும்போதோ…… தலித்துகளுக்கோ, பிற்படுத்தப்பட்டோருக்கோ சமூகநீதி மறுக்கப்படும்போதோ…… தங்களது சகல துவாரங்களையும் பொத்திக் கொண்டிருக்கிற இந்தப் பேரா(சை)யக் கட்சிக்காரர்கள் “ஈழம்” என்று வாயைத் திறந்தாலே போதும் எகிறிக்குதித்து வந்துவிடுகிறார்கள்.
அதைப் பார்க்கும்போது இவர்களுக்குத் தலைவர் சோனியா காந்தியா? அல்லது ராஜபக்சேவா? என்கிற நியாயமான கேள்வி ஆறறிவு உள்ளவர்கள் எவருக்கும் எழத்தான் செய்யும். அதுசரி…… இந்தப் பேராயக் கட்சி இப்போதுதான் இப்படியா……? அல்லது எப்போதும் இப்படியா? என்கிற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இன்றைய தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆக்டேவியன் ஹியூம் என்கிற வெள்ளைக்காரனது கருவில் உருவான இந்தக் காங்கிரஸ் முட்டை “வெள்ளையனே வெளியேறு” என்கிற சரணத்தோடு துவக்கவில்லை தனது “தேசபக்திப்” பாட்டை. “மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் மகாராணியார் நீடூழி வாழ்க” என்றே தனது அன்றாடப் பணிகளை ஆரம்பித்தது. ஆம். இந்திய “சுதந்திரப்” போராட்ட வரலாற்றை அறிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் காங்கிரசின் துரோக வரலாற்றையும் அறிந்து கொண்டால்தான் தற்காலத் தற்குறிகளின் தொடைதட்டல்களை விளங்கிக் கொள்ள முடியும்.
மாவீரன் பகத்சிங்கும் அவனது தோழர்களும் இந்தியாவின் உண்மையான சுதந்திரத்திற்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டு bagat-singஇன்றோடு எழுபத்தி எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் அம்மாவீரன் தூக்கு தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருந்த வேளையில் மகா ஆத்மா காந்தி ஒரு கடிதம் எழுதினார் பிரிட்டிஷ் பிரபு எமர்ஸனுக்கு. என்னவென்று தெரியுமா நண்பர்களே……? “நீங்கள் தூக்கில் போடுவதென்று முடிவு செய்துவிட்டால் கராச்சியில் நடக்க இருக்கும் காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்னரே அவரை போட்டு விடுவது நல்லது.” என்று.
இன்று காங்கிரசார் தபால்தலை உட்பட இன்னபிற இத்யாதிகளுடன் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் மாவீரன் பகத்சிங் அன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு “தீவிரவாதி”. அதுவும் கராச்சி மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலேற்றப்பட வேண்டிய “பயங்கரவாதி.”
 “தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்காளர் தொகுதிதான் ஓரளவுக்காவது அம்மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற உரிய வழி” என முழங்குகிறார் அம்பேத்கர். அதன் தார்மீக நியாயம் புரிந்து 1932 இல் பிரிட்டிஷ் பிரதமரே தீர்ப்பு அளிக்கிறார் “அம்பேத்கரின் நியாயம் அங்கீகரிக்கப்படுகிறது” என்று. “இது எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்திவிடும்” என்று எரவாடா சிறையிலேயே “சாகும்வரை” “உண்ணாவிரதத்தை” அறிவித்து அம்பேத்கரை அல்லலுக்கு ஆளாக்குகிறார்கள் காந்தியும், ambedkar-sகாங்கிரசாரும். அப்போதுதான் இந்த “உண்ணாநோன்பு” குறித்து கிண்டலடித்து நீதிக்கட்சியின் நாளேடான திராவிடன் எழுதியது :“காந்தியார் எதற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தார் என்றால் இந்திய நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தாழ்த்தப்பட்டு…… ஒடுக்கப்பட்டு…… நாதியற்று…… நசுங்கிக் கிடக்கும் ஏழு கோடி பிணங்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதே காரணமாம் ! அந்தோ இக்காரணத்தை எண்ணும்போதுதான் காந்தியின் ஒரு உயிரை விட எமது ஏழுகோடி ஏழை மக்களின் ஏழு கோடி உயிர்கள் பெரிதல்ல என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது.”
 தலித் மக்களின் விடுதலைக்காக சாகும் வரையிலும் போராடிய மாமனிதன் அம்பேத்கர் அன்றைய காங்கிரசாருக்கு “இந்து சமூகத்தைக் கூறு போட வந்த குழப்பவாதி”. இன்றைய கதர்சட்டைகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வார்த்தெடுத்த மேதை.
இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து பிரிட்டிஷ்காரர்களுக்கு கிலி மூட்டிய ஆனானப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போசே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குள் பட்டபாடும்…… ஆன பிற்பாடு கதர்க்குல்லாக்களிடம் பட்டபாடும்…… பிற்பாடு “உங்கள் சகவாசமே வேண்டாம்…… உங்கள் கதர்க்கொரு கும்பிடு…… உங்கள் காங்கிரசுக்கொரு கும்பிடு……” என்று வெறுப்போடு வெளியேறியதையும் வரலாறு தனது பக்கங்களில் அழுத்தமாகப் பதித்து வைத்திருக்கிறது.nethaji“சுபாஷ் போஸ் நம்பத் தகுந்தவரே அல்ல என்பதை நான் கவனித்து வந்துள்ளேன். எனினும் காங்கிரசின் அடுத்த தலைவராக வரக்கூடியவர் அவரைத் தவிர வேறு யாருமல்ல.”இது காந்தி வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதம். –நவம்பர் 1. – 1937.
ஆக அன்றைய காங்கிரசாருக்கு நேதாஜி நம்பத்தகாதவர். இன்றைய காங்கிரசாருக்கு நேதாஜி நம்பிக்கை நாயகன்.
சொந்த நாட்டின் விடுதலை வீரர்களுக்கே “தீவிரவாதி……” , “பயங்கரவாதி……” எனப் பட்டம் சூட்டியவர்கள்…… அண்டை நாட்டின் போராளிகளையா அங்கீகரிக்கப் போகிறார்கள்……? இது மட்டும் என்றில்லை. சமூக மாற்றங்களுக்கான அடித்தளம் எங்கெங்கெல்லாம் ஆரம்பிக்கப்பட்டதோ…… அங்கெங்கெல்லாம் அதன் அடிக்கல்லை உருவுவதே அதன் தலையாய “தேசபக்த”ப் பணியாக இருந்திருக்கிறது.
நடைவண்டி பழகும் நாட்களிலேயே பெண்குழந்தைகள் விதவைக் கோலம் பூணும் கோரம் சகியாமல் கொண்டுவந்த “இளம் வயது விவாக விலக்கு மசோதா”வை…… “பால்ய விவாகமில்லாவிட்டால் உண்மையான கற்பு சாத்தியமில்லை” என்று சண்டித்தனமாய் எதிர்த்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர் எம்.கே.ஆச்சாரியார்தான்.
கடந்த நூற்றாண்டின் துவக்க காலங்களிலேயே தான் நம்பிய கொள்கைக்கு உண்மையாய் கதர் உடுத்தி…… தனது குடும்பத்தவர்களையும் உடுத்த வைத்து…… கள்ளுக்கடை மறியல்களில் ஈடுபட்டு…… வைக்கத்தில் தெருநுழைவுப் போராட்டங்களில் கைதாகி…… வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி…… இறுதியில் தன் உழைப்பு அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் போனதைப் புரிந்து கொண்டு…… “இனி காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை.” என வெளியேறிய தந்தை பெரியாரையே ஆப்படித்துப் பார்த்தவர்கள் அல்லவா இந்தக் கதரின் பிதாமகர்கள்?
அவ்வளவு ஏன்……? நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் இரத்தக்கண்ணீர், போர்வாள், தூக்குமேடை உட்பட பல நாடகங்களுக்குத் தடை விதித்தும்…… 144 தடை உத்திரவு போட்டும்…… நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தும்……சரமாரியாக கல்வீச்சு நடத்தியும் mrradhaகருத்துச் சுதந்திரத்தை “நிலைநாட்டிய” கண்ணியவான்கள்தான் இந்த அகிம்சையின் புத்திரர்கள்.
ஆனால், அந்தச் சேற்றிலும் காமராசர் என்கிற செந்தாமரை முளைக்கத்தான் செய்தது. எந்தக் காங்கிரஸ்காரர்கள் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை மீது ஏறி நின்று “அகிம்சையை” நிலைநாட்டினார்களோ…… அதே ஆட்கள் மத்தியில் “எம்.ஆர்.ராதா அவர்கள் என்னை எத்தனைதரம் திட்டி இருப்பார் என்று நினைக்கிறீர்கள். அவர் திட்டியதற்காக நான் ஒன்றும் வருத்தப் படவில்லை. அவர் திட்டியதில் நியாயம் இருக்கிறதா என்று பார்ப்பேன். நியாயம்kamarajஇருந்தால் எடுத்துக் கொள்வேன்.” என்று முழங்கினார் காமராசர். தன்னையே விமர்சித்தாலும் மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளித்த காமராசர் எங்கே……?
நியாயமான கருத்துக்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாத தங்கபாலுக்களும்…… இளங்கோவன்களும் எங்கே……?
எல்லாவற்றுக்கும் மேலாய்…… காங்கிரஸ் நண்பர்களிடம் கேட்பதற்கும் நியாயமான கேள்வி ஒன்றிருக்கிறது. “பொட்டுக்கட்டுதல்” என்கிற பெயரால் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மட்டும் தேவரடியார்களாக சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருந்தபோது அதைத் தடுக்கக் கொண்டு வந்ததுதான் “தேவதாசி ஒழிப்புச் சட்டம்”. ஆனால் அச்சட்டம் வந்தால் “எங்கள் பண்பாடு கெட்டுப் போகும்…… எங்கள் கலைகள் அழிந்துவிடும்……” என்று பெண் இனத்துக்கே எதிராக குரல் கொடுத்தவர்தானே சத்தியமூர்த்தி……
இன்னமும் அவர் பெயரால் உங்கள் “பவன்” இயங்குவது நியாயமா……?
அல்லது…… கடைக்கோடி மனிதனுக்கும் இந்தக் கல்வி போயாக வேண்டும் என்று வாழ்வின் இறுதிவரை கவலைப்பட்டாரே காமராசர்……
அந்தக் காமராசரின் பெயரால் உங்கள் “பவன்” இயங்குவது நியாயமா……?
யோசியுங்கள்.
ஆனால், அதற்கும் முன் தமிழ் மக்களும் தங்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றிருக்கிறது.
அதுதான் :
கதர்ச்சட்டைக்காரர்கள் இன்று யார் யாரையெல்லாம் தியாகிகள் என்கிறார்களோ
அவர்களெல்லாம் நாளைய துரோகிகள்.
அவர்கள் யார் யாரையெல்லாம் துரோகிகள் என்கிறார்களோ……
அவர்களே நாளைய தியாகிகள்.
அவர்களது அகராதிப்படியே.
-----------------------------------------------------------------------------------------


ராகுலின் தமிழ் நாட்டுப் பயணத்தை ஒட்டி உள்ளூர் காங்கிரஸ் ஆசாமிகள் கொடுத்த விளம்பரங்களைப் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது. நிச்சயம் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கத்தான் போகிறது என்பது. ஆனால் இங்கல்ல பிரிட்டனில் என்று. காரணம் : ஏறக்குறைய அத்தனை விளம்பரங்களுமே ஆங்கிலத்தில் இருந்ததுதான். இதில் ராகுல் அடித்த கூத்துகள் தனி ரகம். ஏற்கெனவே கோமா ஸ்டேஜில் கிடக்கும் காங்கிரசை தூக்கி நிறுத்த என்னென்ன வழிகள் என்று அவர் ஊர் ஊருக்கு ஆலோசித்த காட்சிகள்தான் அற்புதத்திலும் அற்புதம்.
வாரிசின் அடிப்படையிலேயே உலா வந்திருக்கும் ராகுல்…..
அதே வாரிசு அடிப்படையில் வந்திருக்கும் கார்த்திக் சிதம்பரத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு வாரிசு அரசியல் ஒருபோதும் கூடாது என்று முழங்கிய முழக்கமென்ன……..
இன்னமும் இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் போபர்ஸ் ஊழலின் பிதா யாருடைய பிதா எனக் கண்டுபிடிக்கக் கையாலாகாத நிலையில் “ஊழலை ஒழிப்பேன்” என கர்ஜித்த கர்ஜனையென்ன…….
அடடா…… எல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள்தான்.
சத்தியமூர்த்தி பவனில் பீட்டர் அல்போன்சை ”பேசாதே உட்காரு” என ஒரு கோஷ்டி சொல்ல…..
”பேசு தலைவா”ன்னு இன்னொரு கோஷ்டி திருப்பிச் சொல்ல…..
ரெண்டு கோஷ்டியையும் சேராத இன்னொரு கோஷ்டி மைக்கைப் பிடிக்க…….
மற்றொரு கோஷ்டி மைக்கை ஆப் செய்ய…….
இத்தனைக்கும் நடுவே ”கோஷ்டி பூசலை ஒழிப்பதுதான் என் லட்சியம்” என ராகுல் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டாராம்…….
ஆக இருக்கிற கோஷ்டிகள் போதாதென்று கடைசியில் காங்கிரசுக்குள் ”கோஷ்டியை ஒழிக்கும் கோஷ்டி” என்று புதிதாக ஒரு கோஷ்டி உருவானதுதான் மிச்சம்.
குடிசைக்குள்ளே திடீரென்று நுழைவது……
குழந்தைப் பசங்களோடு கோலி குண்டு விளையாடுவது……
தேர்தல் நேரத்தில் “வண்க்க்கம்” என்று பல்லிளிப்பது…….
போன்ற பல ஸ்டண்ட்டுகளை அப்பா ராஜீவ்….. பாட்டி இந்திரா…… கொள்ளுத் தாத்தா நேரு….. காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாகப் பார்த்த மாநிலம்தான் தமிழகம் என்கிற வரலாற்றையும் யாராவது சொல்லிக் கொடுத்து கூட்டி வந்திருந்தால் தேவலை.
எல்லாவற்றுக்கும் மேலாக…….
”ஊழலை ஒழிப்பேன்….”
”கோஷ்டி அரசியலை ஒழிப்பேன்…..”
”வாரிசு அரசியலை ஒழிப்பேன்….. ”
என்றெல்லாம் இப்படித் தனித்தனியாக தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்கு பதிலாக பேசாமல் பெரியார் சொன்ன மாதிரி ”காங்கிரசை ஒழிப்பேன்” என ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் ராகுல்.
                                                                           **********


கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை வெட்கமின்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஆதரித்ததின் மூலம். அகிம்சை……… அணி சேராக் கொள்கை……… பள்ளிப் பருவத்தில் படித்த பஞ்ச சீலக் கொள்கை……… என அத்தனையும் அம்மணமாய் நிற்கிறது.
சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரங்களை விசாரிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 17 நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் ஈழ மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் அள்ளக்கையாக இருந்து அதனை ஆதரித்ததன் மூலம் மொத்த தமிழ் இனத்தின் முகத்திலே கரியை அல்ல மலத்தைப் பூசியிருக்கிறது மத்திய அரசு.
மாபெரும் மனிதப் பேரவலம் நடந்தேறியது கண்டு எங்கெங்கோ இருக்கிற அரசுகளெல்லாம் பதை பதைத்து குரல் கொடுத்த வேளையில் இன்னும் எத்தனை பிணங்கள் விழுந்தாலும் நாங்கள் சிங்கள அரசின் பக்கம்தான் நிற்போம் என ஐ.நா.சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்த வெட்கக்கேட்டிற்கு என்ன பெயரிட்டு அழைப்பது?
இப்படி இந்த ஈனச் செயலில் இறங்குவதற்கு முன்னர் இந்திய மக்களின் ஒப்புதலைப் பெற்றார்களா? அல்லது பாராளுமன்றத்தைக் கூட்டி விவாதித்து ஒப்புதல் பெற்று வாக்களித்தார்களா? யாரின் அனுமதி பெற்று இந்த அநீதிக்குத் துணை நின்றது மத்திய அரசு?
மத்திய அரசு பச்சையாகச் சொல்ல வரும் விசயம் இதுதான்: ஆமாம். அப்படித்தான் செய்வோம்.உங்களால் என்ன புடுங்க முடியும்? மீறி மீறிப் போனால் ஒரு ஆர்ப்பாட்டம்……… ஒரு உண்ணாவிரதம்……… ஒரு நாள் கடையடைப்பு……… அவ்வளவுதானே. உங்களால் முடிந்ததைப் பாருங்கள். என்பதுதான்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx



புரட்சி


மாவோவை உங்கள் முன்னர் நிறுத்திவிட்டு நான் எஸ்கேப் ஆவது நல்லது.paams
“புரட்சி என்பது ஒரு மாலை விருந்து அல்ல, அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஓவியம் தீட்டுவதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல; அது அவ்வளவு பண்பானதாக இருக்காது; அவ்வளவு ஓய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக, இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி; ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தைத் தூக்கி எறியும் ஒரு பலாத்கார நடவடிக்கை.”

ஒரு வீடு இரு திருடர்கள்






அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
 நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.

பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது நம் தவறல்ல.