Friday, September 23, 2011

ஈ.வே.ராமசாமி.



நினைவிருக்கிறதா நண்பா உனக்கு…?
ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு…
சில பழந்துணிகளைத் தோளில் தொங்கும் மூட்டையில் திணித்துக்கொண்டு
மலையாள தேசம் நோக்கி நடைபோட்ட நம் நண்பனை…?
அவன் போன காரியம் என்னவென்பது புரியுமா உனக்கு?
அந்த நண்பன் போய்ச் சேர்ந்த பிற்பாடு
தனது துணைவியையும் துணைக்கு அழைத்துக்கொண்டான்.
அது போதாதென்று அவனது தங்கையும் அப்புறம் போய்ச் சேர்ந்தாள்.
அவன் போனது…
கள்ளிக்கோட்டையின் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக அல்ல.
அவன் துணைவி போனது எர்ணாகுளக் கரையோரங்களில் படகுகளில் பவனி வருவதற்கும் அல்ல.
அவனது தங்கை பயணப்பட்டது அவர்கள் இருவருக்கும் பேச்சுத் துணைக்காகவும் அல்ல.
அந்த நண்பனின் பெயர் நினைவுக்கு வருகிறதா உனக்கு?
அவன் பெயர்: ஈ.வே.ராமசாமி.
துணைவியின் பெயர்: நாகம்மை.
தங்கையின் பெயர்: கண்ணம்மா.
அவர்கள் அனைவருமே பயணப்பட்டது….
வைக்கம் மண்ணின் மக்களது சமூக இழிவைப் போக்குவதற்காக.
‘வைக்கம் தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடமாடக்கூட கூடாது’ என்கிற அவலத்தை அழித்து ஒழிப்பதற்காகத்தான் பயணப்பட்டான் அவன்.
அடக்கு முறையையே ஆயுதமாகக் கொண்டவர்கள் அவனை அடைத்து வைத்தனர். அழைப்பு விடுத்தான் அவனது துணைவிக்கு.
அடுத்த கட்டப்போராட்டத்தில் அணி சேர்ப்பதற்கு.
வந்த அவரும் விலங்கிடப்பட்டார்.
அடுத்ததாக வந்த அவனது தங்கை கண்ணம்மாவும் கைதாகி,
சிறையின் சுவர்களை செருக்குறச் செய்தனர்.


திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மட்டுமே எழுதிப் பழகிய அந்த ஈரோட்டுக் கிழவனது போராட்டங்களால்தான் நம்மில் பலர் இன்று பட்டதாரிகளாகவும், பெரிய பெரிய பொறுப்புகளிலும் அமர்ந்திருக்க முடிகிறது.
அவன் அன்று கருப்புச்சட்டை போட்டிராவிட்டால் நம் தலைமுறை இன்று வெள்ளைச்சட்டை அணிந்திருக்க முடியாது.
அந்தக் கிழவன் போராடியிருக்காவிட்டால் அன்று கூனிக்குறுகி கக்கத்தில் இடுக்கியிருந்த துண்டை நாம் இன்று நமது தோள்களுக்கு மாற்றி கம்பீரமாக நடை போட்டுக் கொண்டிருக்க முடியாது.
படிப்பறிவில்லாத பெரியார் அன்று போர் முரசு கொட்டாது இருந்திருந்தால் இன்று காதல் திருமணங்களும், சாதி மறுப்புத் திருமணங்களும், கைம்பெண்களது மறுமணங்களும் சாத்தியப்பட்டிருக்காது.
ஆம் ஒவ்வொரு சமூக மாற்றத்தின் பின்னணியிலும் ஒரு சுயமரியாதைக்காரனின் ரத்தம் சிந்தப்பட்டே வந்திருக்கிறது.

“ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்றால் இறைத் தலங்களில் மட்டும் ஏனடா இந்தப் பாகுபாடு?” என்று பெரியாரிடமிருந்து ஓங்கி ஒலித்தது அந்தக் குரல்.


அந்த ஈரோட்டுக் கிழவன் போட்ட போட்டில்தான் விழித்துக் கொண்டது. அவன் ஆத்திகர்களுக்கும் சேர்த்துப் போராடினான். சமத்துவமற்ற சமயத் தலங்களை சனநாயகப் படுத்துவதில் முன்னணி வீரனாய் நின்றான்.



ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..
வைக்கம் நகரத்து வீதிகளில் ஒடுக்கப்பட்ட ஆத்திகர்கள் நடமாடியிருக்கவே முடியாது.
கோபுரத்தை மட்டுமே கும்பிட்டுச் சென்றவர்கள் கோயிலுக்குள் கால் வைத்திருக்க முடியாது.


”ஆலயங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்கிற குரல் உரக்க எழுந்திருக்க முடியாது.


பெண்கள் வழிபடுவதற்கே பிரஸ்னம் பார்த்து குறி சொல்லிக் கொண்டிருக்கும் ”கேரள ஏட்டன்மார்களுக்கு” நடுவே வழிபடுவது மட்டுமல்ல….. பெண்கள் வழிபாடே நடத்தலாம் என்கிற நெத்தியடி மேல்மருவத்தூர் வழிமுறைகள் தோன்றியிருக்க முடியாது.



தெருநுழைவுப் போராட்டம்……
கோயில் நுழைவுப் போராட்டம்…..
கருவறை நுழைவுப் போராட்டம்……
சாதிபேதமற்ற வழிபாட்டு உரிமைக்கான போராட்டம்………
என எண்ணற்ற போராட்டங்களை இம்மண்ணில் அவர் நடத்தியிருக்காவிட்டால்
“போங்கப்பா நீங்களும்….. உங்க ஆத்திகமும்” என்று துண்டை உதறித் தோளில் போட்டு விட்டுப் போயிருப்பார்கள் பலர்.

ஆம்.
பெரியார் நாத்திகர்களுக்கு  மட்டுமில்லை
ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்.





No comments:

Post a Comment