Friday, September 23, 2011

”தடா”வுக்கு தம்பி…… ”பொடா” வுக்கு அண்ணன்.


ஆனாலும் இந்த மீனவர்கள் இப்படி அடம் பிடிக்கக் கூடாது. ’மீன் பிடித்தால் கடலிலேதான் மீன் பிடிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்தால் எப்படித்தான் அதைத் தாங்கிக் கொள்ளும் “நம்” இந்திய அரசு. ஏன் இந்த மீனவர்களுக்கு கடலை விட்டால் வேறு இடமே கிடையாதா? எங்காவது ஏரி….. குளம்….. குட்டை அல்லது கூவம் என்று தேடிப் போக வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இப்படி உயிரை வாங்கினால் என்னதான் செய்யும் அரசு?
இப்படி எல்லோரும் ’தாம்தூம்’ என்று குதிப்பதற்குக் காரணம் மத்திய அரசு இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டுவருவதாக இருந்த “மீன்பிடி தொழில் ஒழுங்குமுறைச் சட்டம்”தான். இப்போதைக்கு தள்ளிவைத்திருக்கிற அந்தச் சட்டத்தில் அப்படி என்னதான் பஞ்சமாபாதகம் இருக்கிறது என்று எப்பாடுபட்டாவது பார்த்தே தீருவது என்கிற வெறியே கிளம்பி விட்டது. இவர்கள் எல்லோரும் போட்ட கூப்பாட்டைப் பார்த்து. ஏதோ நமக்கு இருக்கிற அறைகுறை அறிவுக்கு படித்துப் பார்த்தால்…… அட….. இந்த அரசுக்கு நம்ம மீனவர்கள் மேல் இவ்வளவு கரிசனமா? என்று கண்ணில் தண்ணியே வந்துவிட்டது. அப்படியென்ன இல்லாததையும் பொல்லாததையும் அதில் சொல்லிவிட்டார்கள்.?
கடலுக்குள் மீன் பிடிக்கப் போகும்போது வழி தவறி வேற்று கிரகத்துக்குப் போய் விடாமல் இருக்க 12 கடல் மைல் தொலைவுக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும்…..
அதுவும் கடலோரக் காவல்படையிடம் பெர்மிட் வாங்கிக் கொண்டு போக வேண்டும்…..
அதிக மீன்களை ஏற்றி பாரம் தாங்காமல் மீனவர்கள் படகோடு கைலாயமோ……. பரலோகமோ போகாமல் தடுக்க பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன் பிடிக்கக் கூடாது……
எந்தெந்த மீன்களைப் பிடிக்கலாம்………
எந்தெந்த மீன்களைப் பிடிக்கக் கூடாது…….
எந்தெந்த வலைகளைப் பயன்படுத்தலாம்……
என்றெல்லாம் அந்த சோதாவில்……..ச்சே அந்த மசோதாவில்  ”மீனவ நண்பர்கள்” அக்”கரை”யோடு சொல்லியிருப்பதை பார்த்தால் புல்லரிக்கிறது.
ஆனால் மீனவர்களோ “12 கடல் மைல் தொலைவுக்குள் மீன் பிடி என்றால் மீனல்ல…… நத்தைகூட கிடைக்காது. கடமா, சுறா, கனவாய் போன்ற நல்ல மீன்கள் வேண்டுமென்றால் ஆழ்கடலுக்குப் போனால்தான் கிடைக்கும். பத்தாயிரம் ரூபாயுக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும் என்றால் கடலுக்குள் போகவே வேண்டியதில்லை. கரையிலேயே கவுந்தடிச்சு குப்புறப் படுத்துக்க வேண்டீதுதான்.” என்கிறார்கள்.
இதிலென்ன பிரச்சனையோ நமக்குப் புரியவில்லை. வலை போட்டுப் பிடித்ததை வகை வகையாய் பிரித்து எந்த மீன் என்ன விலை என்று கணக்குப் பார்த்து பத்தாயிரம் ரூபாய் போக மிச்சமுள்ள மீன்களை ரோஜா பட கதாநாயகி மாதிரி “மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை” என்று பாடியபடியே கடலில் கடாசிவிட்டு கரைக்குத் திரும்ப வேண்டியதுதானே என்று திருப்பிக் கேட்டால்…….
படகுக்கான டீசல் செலவே ஆறாயிரம் ரூபாய்…… இதில் வலை வாடகை, ஆள் கூலி எல்லாம் போனால் வெறும் ஊறுகாயை நாக்குல தடவீட்டு நடமாடவேண்டீதுதான். படகில் தப்பித் தவறி பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன் இருந்தால் எங்களைக் கைது செய்து படகையும், வலைகளையும் பறிமுதல் செய்யலாமாம்…… படகில் உள்ள ஒவ்வொரு மீனவருக்கும் 25000 ரூபாய் அபராதம் விதிக்கலாமாம்…… அதிகாரிகளைத் தடுத்தால் 10 லட்சம் அபராதத்தோடு ஒரு ஆண்டு சிறையும் உண்டு என்கிறது இக்கூறுகெட்ட சட்டம்.” என்று அலறுகிறார்கள்.
நம்ம அரசுகளைப் பற்றி ஒரு இழவும் இந்த மீனவர்களுக்குப் புரிபடமாட்டேன் என்கிறது.
மீனவர்களோ அல்லது விவசாயிகளோ வாழமுடியாமக் கரடியாகக் கத்தும்போது வர்றாங்களோ இல்லியோ…. ஆனா கரெக்டா வாய்க்கரிசி போடும்போதாவது வந்து சேருவாங்கில்ல….. லேட்டா வந்தாலும் செத்ததுக்கு பேட்டா குடுக்க கண்டிப்பா வருவாங்க. அதுவும் இடைத்தேர்தல் ஏதாவது பக்கத்துலதான்னா…… அடிச்சுது யோகம்…. அவங்க குடும்பங்களுக்கு. வீணாப் ’போய்ச் சேர்ந்தவங்க’ வீட்டுல ஒருத்தருக்கு வேலை…. இடைக்கால நிவாரணத் தொகை…… விரைவிலேயே முழு பட்டுவாடாவுக்குமான உத்தரவாதம்…….ன்னு அவங்க காட்டுல அடைமழைதான். இதைக்கூட புரிந்து கொள்ளாமல் அழிச்சாட்டியம் செய்தால் எப்படி.? இந்த மீன் பிடி தொழில் ஒழுங்குமுறைக்கான சட்டமே நாட்டின் “பாதுகாப்பு” கருதி கொண்டுவரப் படும் சட்டம். அதுவும் மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை மனதில் வைத்து கொண்டு வர இருக்கின்ற சட்டம் என்று சொன்னால் அதையும் பிரித்து மேய்கிறார்கள் மீனவர்கள்.
மும்பை கடற்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நபர்களின் நடமாட்டம் இருப்பதாக உளவுப் பிரிவுக்கு முன்னதாகவே தகவல் கொடுத்தது மீனவர்கள்தான். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் குறட்டை விட்டுவிட்டு காவல் அரண்களா இருக்கின்ற எங்களுக்கு எல்லைகள் வகுத்து அபராதம் விதிப்பது அயோக்கியத்தனம். உண்மையில் அபராதம் விதிக்க வேண்டுமென்றால் முன் கூட்டியே தகவல் தந்தும் பிடிக்கக் கையாலாகாத உளவுத்துறைக்கும் உள்துறை அமைச்சருக்கும்தான் அபராதம் விதிக்க வேண்டும். மாண்டால் கடல்…… மீண்டால் கரை என்று அன்றாடம் செத்துப் பிழைக்கும் எங்கள் வாழ்வோடு விளையாடுவது எங்கு கொண்டு போய் விடப்போகிறது என்பது போகப் போக தெரியும்” என்று கோபத்தோடு குமுறி எடுக்கிறார்கள்.
நமக்கென்னவோ…….
”12 கடல் மைலைக் கடந்தால் 9 லட்சம் அபராதம் 3 ஆண்டு சிறை…..”
”பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன் இருந்தா பறிமுதலோடு 25000 ரூபாய் அபராதம்…..”
”கடலில் மீன் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக இறங்கினால் கூட தண்டனை…….”
”மாநில அரசு கொடுத்த அனுமதி போக கடலோர காவல்படையின் பெர்மிட் இல்லாவிட்டால் கைது, தண்டனை……”
”கைதானவர்களை நீதி மன்றத்தில் எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் ஆடி அசைந்து எப்போது வேண்டுமானாலும் ஆஜர் படுத்தலாம்….. யாரும் கேள்வி கேட்க முடியாது…..”
”யோக்கிய சிகாமணிகளான அதிகாரிகள் ”நல்ல எண்ணத்தோடு” எடுக்கும் நடவடிக்கையைக் கேள்வி கேட்டால் 10 லட்சம் அபராதம், சிறை……..”
”எந்த மீனைப் பிடிக்கலாம்…… எந்த வலையில் பிடிக்கலாம் என்பதற்கான கட்டுப்பாடுகள்…….”
என இப்படியெல்லாம் ”நாட்டின் பாதுகாப்புக்காக” கொண்டு வரப்பட இருக்கிற சட்ட மசோதாவில் இல்லாதது ஒன்றே ஒன்றுதான்.
அது:
மீனவர்களுக்கு எந்தெந்த நாட்களில் அந்த மூடு வரலாம்……
மீனவர்கள் எந்தெந்த நாட்களில் தங்கள் பெண்டாட்டிகளோடு தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாம்…….
எந்தெந்த நாட்களில் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்….. என்பது மட்டும்தான் விடுபட்டிருக்கிறது
அதையும் அப்படியே இந்த மசோதாவில் சேர்த்து விட்டால் நாடு ஓகோன்னு உருப்பட்டு விடும் .
மொத்தத்தில் இது ”தடா”வுக்கு தம்பி…… ”பொடா” வுக்கு அண்ணன்.

No comments:

Post a Comment