Friday, September 23, 2011

அணு உலை

அந்தக் காலத்துல எங்க அப்பத்தா நெலாவைக் காட்டித்தான் சோறு ஊட்டும். அப்பறம் நெலாவைப் பாம்பு முழுங்கறது… பாம்பைப் போட்டு கடலைக் கடையறது… அப்பிடி இப்பிடின்னு கதையெல்லாம் சொல்லும். கொஞ்சம் பெரிசாக பெரிசாக நம்மூர்ல பெரியார் வேற மூலமூலைக்கு நின்னுகிட்டு “அடப் பைத்தியக்காரா! நெலாவென்ன லட்டா? ஜிலேபியா? பாம்பு வந்து முழுங்கறதுக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கடா முட்டாப்பசங்களா…”ன்னு கன்னா பின்னான்னு திட்டீட்டு இருந்தது புரிய ஆரம்பிச்சுது.


பத்தாததுக்கு திடீர்ன்னு ஒரு நாள் உங்கள மாதிரி நாலு பெரிய மனுசனுங்க சேந்து நெலாவுலயே போய் குதிச்ச சேதி கேட்டதுமே சின்ன வயசுல கேட்ட சமாச்சாரங்க மேலெயெல்லாம் சந்தேகம் பொறந்துடுச்சு.



இருந்தாலும்  பாருங்க….
இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

ஆனாலும் நம்மூர் பசங்கள நம்ப முடியாது. ஏதாவது புளுகுனாலும் புளுகுவானுகன்னு தெரிஞ்சுதான் இந்தக் கடுதாசிய எழுதறேன்.
அதென்னவோ கூடங்குளத்துல அணு உலையக் கொண்டுவரப் போகுது நம்ம கவர்மெண்டு… அது வந்தா ஊரே காலியாயிடும்…. புல் பூண்டு கூட மொளைக்காது….ன்னு மொளச்சு மூணு எலை கூட உடாத பசங்கெல்லாம் பேசீட்டுத் திரியுதுங்க. ஏங்க அணு ஒலை நம்ம விஞ்ஞானத்துக்கு எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய கெவுர்த்தி. இதப் புரிஞ்சுக்காம ஆபத்து கீபத்துன்னு அளந்துகிட்டு இருக்கானுங்க சிலபேரு. ஆனா அவனுக சொல்றதுலயும் ஒண்ணு ரெண்டு நல்லது இருக்கத்தான் செய்யுதோன்னு ஒரு சந்தேகங்க….
அமெரிக்காவுல என்னமோ இந்த ஒலைகளை வருசத்துக்கு கொறஞ்சது அறநூறு தடவையாவது மூடறானுங்களாமா? ஏங்க மூடறதுக்காகவா தொறக்கிறது? ஒரு எழவும் புரிய மாட்டேங்குதுங்க. ஏதோ உங்கள மாதிரி வெவரம் தெரிஞ்ச நாலுபேரு வெளக்கிச் சொன்னாத்தானே எங்குளுக்குப் புரியும்.
“அது” வந்தா இந்த நாட்டுக்கே வெளக்குப் போடலாம்… பேக்டரி ஓட்டலாம்….ன்னு சொல்ற ஆளுங்களும் இருக்காங்க. அப்புறம் என்னங்க இந்த நாட்டுக்கே வெளக்கு வருதுன்னா ஒரு ஊரு செத்தாத்தான் என்ன? அதுவும் பொதைக்கற வேல மிச்சம்னு சொல்றாங்க. அப்படியே சாம்பலாயிருமாமா? தூக்கற வேலயும் இல்ல… பொதைக்கற வேலயும் இல்ல.
ஒரு நாட்டுக்கு கரண்டு கெடைக்குதுன்னா ஒரு ஊரையே கொளுத்தலாம்…. இந்த ஒலகத்துக்கே கரண்டு கெடைக்குதுன்னா ஒரு நாட்டையே கொளுத்தலாம். எத்தன பேரு பஸ்சுலயும் ரயில்லயும் அடிபட்டுச் சாகறானுங்க… இதுல செத்தா எவ்வளவு கவுரவம். விஞ்ஞானத்துக்காக செத்தவன்னு பேராவது மிஞ்சுமில்லீங்களா?
இருந்தாலும்  பாருங்க….
இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….
அதென்னவோ அப்பிடிக் கிப்பிடி இந்த ஒலை வெடிக்கறமாதிரி தெரிஞ்சா ராவோட ராவா ஊர்சனத்த வேற தூரத்து ஊருக்கு கொண்டுபோற அளவுக்கு நெறைய பாதுகாப்பு சமாச்சாரமெல்லாம் செஞ்சிருக்கோம்; அதனால யாரும் பயப்பட வேண்டாம்னு கவர்மெண்டு சொல்றதா கேள்விப்பட்டேங்க. இதுலதாங்க ஒரு சின்ன சந்தேகம்….. என்னடா இது இவனே இப்பிடிக் கேக்கறானேன்னு கோவுச்சுக்கக் கூடாது.
ஏங்க நம்மூர் மூலைல தீப்புடிச்சாலே இந்த பயருசர்வீசு வர்றதுக்கு ஏழு மணி நேரமாவுது….. வந்தாலும் தண்ணி வந்தா பைப்பு கழுண்டுரும்…. பைப்பு செரியா இருந்தா தண்ணி வராது…. எல்லாஞ் சேந்து வர்றதுக்குள்ள தீ தானா அணஞ்சுரும். அப்புறம் எப்பிடீங்க இந்த ஒலைல ஏதாவுதுன்னா நாங்க உங்கள நம்பீட்டு உக்காந்திருக்கிறது? ஏதோ கேக்கோணும்னு தோணுச்சு கேட்டுட்டேன்…. சரி அத உடுங்க….
உலைல கெடக்கற கசடாமா….? அது பேரு புளூட்டோனியமோ என்னமோ…. அதுல இருந்து ஏதோ சக்தி வெளியே வந்துட்டே இருக்கும்னு சொல்றாங்க. அந்தக் காத்து நம்ம மேல பட்டாலேயே கண்ட கண்ட நோவெல்லாம் வரும்னு சொல்றாங்களே…. இது நெசந்தாங்களா?
ஆனா அதுக்கும் வழி இருக்கிறதா நம்மூர்ல பேசிக்கிறாங்க. அந்தக் கசட பத்திரமா எடுத்துட்டுப்போயி பொதைச்சிருவாங்க…. இல்லேன்னா நம்ம நாயர் கடை பார்சல் மாதிரிப் பண்ணி கடலுக்குள்ள  கடாசிருவாங்கன்னு கேள்விப்பட்டேன்.
உங்குளுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு….
நீங்குளுந்தான் இந்த சனங்க உசுரக் காப்பாத்தறதுக்காக தலைல இருக்குற மசிரெல்லாம் போயி பாடாப்படறீங்க….
இருந்தாலும்  பாருங்க….
இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….
கசடைத் தூக்கி கடலுக்குள்ள போட்டா என்னைக்காவுது அதுல ஓட்டை விழுந்துச்சுன்னா மீனெல்லாம் சாகும்…. அதத் தின்னா நம்ம சனமெல்லாம் சாகும்னு சொல்றானுகங்க. ஏங்க….  இவனுக மீன் புடிக்க வேற எடமே கெடைக்காதா….? கடல்தான் கெடைச்சுதா….? ஏன் நம்மூர் வாலாங்கொளம் மாதிரி வேற ஏதாவது கொளத்துல மீன் புடிச்சா போதாதா….? அப்பிடி அதுலயும் தீந்து போச்சுன்னா நம்ம கெவர்மெண்டே ஊருக்கு ஏழு கொளம் வெட்டி அதுக்குள்ள மீனைக்கொட்டி நம்ம “பஞ்சாயத்து ராசு” மாதிரி “மீன் ராசு”ன்னு ஒரு திட்டம் கொண்டாந்தா எல்லாம் செரியாயிடுங்க…. இது புரியாம இவனுங்க…..
என்னமோ…. எந்த உலையா இருந்தாலும் முப்பதே வருசந்தான் ஆயுசு…. அதுக்கு அப்பறம் அதை சமாதி மாதிரி காங்கிரீட்டு போட்டு மூடி காவல் வேற வெக்கணும்…. அதக் கட்டறத விட மூடறதுக்கு பல மடங்கு செலவாகும்…. அப்பிடீன்னெல்லாம் சொல்றாங்க…. அதிலிருந்து வர்ற கதிரியக்கக் காத்தாமா….. அதுவேற பத்தாயிரம் வருசம் வரைக்கும் அடிக்கும்னு வேற சொல்றாங்க…. அப்ப ஒண்ணு பண்ணுங்க….. “kaanguraskku  ”  ஓட்டுப் போடாத ஊராப் பாத்து உலையை ஆரம்பிச்சிருங்க….
அது ஓடவும் வேண்டாம்….
அத மூடவும் வேண்டாம்….
ஒரேடியா அந்த ஊரையே மூடீறலாம். இப்பிடியே ஒவ்வொரு ஊரா மெரட்டுனா போதுங்க…. அப்புறம் ஊரென்ன…… நாடே நம்ம கைல….. ஏன்…. இந்த உலகமே நம்ம கைல… எப்புடி நம்ம “ஐடியா”?
இந்தக் கடுதாசிய எழுதி முடிக்கறப்ப இன்னொரு சமாச்சாரம் கைக்குக் கெடைச்சதுங்க. அதுவும் நீங்களே எழுதி  வெளியிட்டதுங்க. ஆனா…. அது கெடைச்சப்பறந்தாங்க கொளப்பமே அதிகமாயிடுச்சு…..
தப்பித்தவறி உலைல இருந்து கதிரியக்கம் கெளம்பீடுச்சுன்னா…..ஜீப்புல மைக்கக் கட்டீட்டு ஊர் ஊராப் போயி தெரியப்படுத்துவோம்னு போட்டிருக்கீங்க…..
ஏங்க….. கதிரியக்கம் கெளம்பீருச்சுன்னு தெரிஞ்சவுடனே எந்தப் பயலாவது ஜீப்பை ஊருக்குள்ள ஓட்டுவானுங்களா…..? இல்ல ஊரை உட்டே ஓடுவானுங்களா….?
சரி….. அது கெடக்கட்டும்…. அப்புடி என்னாவது சந்தேகம்னா அவுங்கவுங்க ஊட்டு ரேடியோப் பொட்டியையும், டீவீப் பொட்டியையும் தெறந்து கேளுங்கன்னு போட்டிருக்கீங்க…..
ஏங்க…. இந்த நாட்டுல என்னைக்காவுது  டீவியும் ரேடியோவும் உண்மை பேசி கேட்டுருக்கீங்களா? பெரியவர் செயப்பிரகாசு நாராயணன் குண்டுக் கல்லாட்டம் உயிரோட இருந்தப்பவே நம்மூர் ரேடியோ அவரைக் கொன்னு போட்டுது. ஊர்ல ஏதாவது பிரச்சனை….. கடையடைப்புன்னா….. ரோட்டுல திரியற கழுதை….. மாடு…. இதையெல்லாம் பாத்துட்டு உங்க ஆளுங்க பஸ்சுகள் பறந்தன….. ரயில்கள் மிதந்தன…. ”மாமூல்” வாழ்க்கை கெடவில்லை….ன்னு கப்சா உடுவாங்க. இந்த லட்சணத்துல நீங்க டீவீயையும் ரேடியோவையும் கேக்கச் சொல்றீங்களே….. இது உங்குளுக்கே நாயமாப் படுதா…..? வேண்ணா ஒண்ணு பண்ணச் சொல்லுங்க….. டீவீலயும் ரேடியோவுலயும்….உலைகள் பத்திரமாஇருக்குகதிரியக்கம் துளிக்கூட வெளியேறல….” அப்பிடீன்னு சொல்லச் சொல்லுங்க…. அப்பத்தான் சனங்க துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஊரைக் காலி பண்ணுவாங்க.
சரி…. இதுவும் கெடக்கட்டும்….. ஊட்டுல இருக்குற சன்னல்…. கதவையெல்லாம் இறுக்கமா மூடீட்டு உள்ள இருக்கச் சொல்றீங்க…..
சரிதான்…. ஆனா இங்க சனங்க ஊடே இல்லாம நாயும் பன்னியும் மாதிரி பசில பராரியா சுத்தீட்டு இருக்குறப்ப எப்புடீங்க ஊட்டுக்குள்ள பூந்து கதவச் சாத்தறது…..சன்னலை மூடறது? கண்டவன் ஊட்ல பூந்தா கதவச் சாத்த முடியும்? அப்பிடியே ஊடே இருந்தாலும் ஓடே இல்லாம….. மழை வந்தா தலைக்கிட்டயும் கால்கிட்டயும் கக்கத்துலயும் ஓட்டைச் சட்டிகளை வெச்சுட்டுக் கெடக்குற எங்கள மாதிரி சனங்க எதப்போயி அடைக்கிறது? எதப்போயி மூடறது? அப்படீன்னா…. ரோட்டோரமாப் படுக்குறவனும்….. பாட்டுப்பாடிப்     பொழைக்கிறவனும்…..    கழைக்கூத்தாடியும்……. எங்க போயி ஒடுங்குவாங்க…..? யார் ஊட்ல பதுங்குவாங்க…..?
இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் நம்ம நாட்டுக்கு அவமானமா இருக்குதுன்னு ஒருவேளை இந்தத் திட்டமோ என்னவோ…. ஆனா இதுக்குப் பதிலா ஊடில்லாம இருக்குற இதுகள ஓட்டீட்டுப் போறதை விட உலைக்குள்ளயே தூக்கிப் போட்டா…. ஏழ்மைய ஒழிச்ச மாதிரியும் இருக்கும்…. ஏழையவே ஒழிச்ச மாதிரியும் இருக்கும்.
இருந்தாலும் உங்குளுக்கு நல்ல மனசுங்க.
எது எப்பிடியோ ஊரைச் ”சுத்தம்” பண்றதுன்னு நீங்க தீர்மானிச்சாச்சுன்னா அதுக்கு “அப்பீலே” கெடையாதுங்க. அந்தக் காலத்துல பிளேக் நோவு வந்து ஊரையே தூக்கீட்டுப் போனாப்பல இந்தக் காலத்துல பிளேக்குக்கு அப்பனா அணு உலை வருது.
இந்த மடம் இல்லைன்னா வேற எந்த மடமாவது போக வேண்டியதுதான்….
அதுக்கும்….
உங்க விஞ்ஞானம்…..
உசுரோட உட்டு வெச்சா….
நன்றி பாமரன்.

No comments:

Post a Comment