Friday, September 23, 2011

கிரகாம்பெல்


இன்றைக்கு பயங்கரவாத எதிர்ப்பு அவதாரம் எடுத்திருக்கும் காந்தியின் மறு உருவான ஒபாமா  சித்தப்பா என்றோ…
அல்லது,
அமெரிக்காவினது வெளியுறவு அமைச்சராகவே ஆகிவிட்ட டோனி பிளேயரது பேரன் என்றோ…
மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டியதில்லை யாரும்.
இந்த ‘பெல்’…
நீங்கள் நினைக்கும் அதே ‘பெல்’ தான்.
அந்த பெல் உருவாக்கிய ‘பெல்’லால் வந்ததுதான் இத்தனை வம்பும்.
எதை நினைத்து இதைக் கண்டுபிடித்தாரோ கிரகாம்பெல். ஆனால் அதை நினைத்து இங்குள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவதில்லை என்பது மட்டும் உறுதி.
டி.வி.யின் எந்தச் சேனலைத் திறந்தாலும்… கெக்கே பிக்கே என்று இளித்துக் கொண்டோ… ‘மாரியாத்தா’ வந்ததைப் போல கையைக் காலை உதறிக் கொண்டோ காம்ப்பியர்களின் தரிசனம்தான் (அதாவது தொகுப்பாளினிகள்)  மதுரையிலிருந்தோ… பம்பாயிலிருந்தோ… துபாயிலிருந்தோ… ‘போராடிக் களைத்த’ தமிழர்கள் இவர்களுக்கு ‘போன்’ போட்டு…
‘இந்தப் படத்திலிருந்து ஒரு பாட்டு…
அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி…
அதற்கு இதுகளும் பதிலுக்கு வழிந்துவிட்டு அபத்தமான அஞ்சாறு விஷயங்களைப் பேசிய பிறகு… ஏதோ பல வருடங்கள் ஒரே தட்டில் இருவரும் சாப்பிட்டு ஒரே பாயில் படுத்துத் தூங்கியதைப்போல போலியான அன்யோன்யத்துடன் கேள்விகளை அள்ளி வீசுவார்கள்.



சாப்பிட்டு ஜீரணம் ஆகாத ஒரு கூட்டம்… இதற்கென்றே அலைவதையும், இந்த அஃறிணைகளுக்குப் ‘பொறுப்பாக’ பதில் சொல்லி ‘அறிவுபூர்வமாக’ கேள்வி கேட்டு… கேட்ட பாடலை ஒளிபரப்புவதற்கென்றே ஒவ்வொரு டி.வியிலும் ஆட்களை வைத்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்கும்போது நாம் தமிழகத்தில் இருக்கிறோமா இல்லை ‘பாண்டி மடத்தில்’ இருக்கிறோமா என்கிற பெரும் சந்தேகம் எழுந்து தொலைக்கிறது.
பாடலைப் போடுவதற்கு முன் இந்த ஜென்மங்கள் அந்தப் பெண்களிடம் உளறும் உளறல் இருக்கிறதே… அய்யோடா…

***
இந்த பாட்டை கேக்குறீங்களே… யாரையாவது லவ் பண்றீங்களா…?
ஐய்யய்யோ இல்லீங்க.
ஏன் சார் லவ் பண்றது தப்பா…?
தப்பில்லைதான்… ஆனால். பென்சன் வாங்கற காலத்துல வீணா எதுக்குமா அதெல்லாம்…?
***
தமிழகம் தொழில் வளர்ச்சியில் எத்தனாவது இடத்தில் இருக்கிறது…
அவசியமில்லை…
தமிழகம் கல்வி வளர்ச்சியில் எத்தனாவது இடத்தில் இருக்கிறது…
அவசியமில்லை…
எத்தனை இளைஞர்கள் வேலை கிடைக்காது பூச்சி மருந்திலும், ரயில் தண்டவாளங்களிலும் தன் உயிரைப் போக்கிக் கொண்டு இருக்கிறார்கள்…
அவசியமில்லை…
எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைக்கும், வரதட்சணை வேட்டை நாய்களுக்கும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்…
அவசியமில்லை…
ஆனால்… ‘போக்கிரி ’ படப்பாடலோ ‘களவானி’ படப் பாடலோ இந்த வாரம் எந்த இடத்தில் இருக்கிறது என்பது தான் ரொம்ப முக்கியம்.
இப்படிப் போகிறது இவர்களது பொழுதுகள்.
நமது கவலை… நமது கோபம்… எல்லாம் கிரகாம்பெல் மீது திரும்புவது நியாயமில்லைதான்.
ஆனால் அத்தியாவசியத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இக்கருவி ஆடம்பரத் தேவைகளுக்காகவும் பொறுப்பற்ற விஷயங்களுக்காகவும் பயன்படுவதற்கு நமது தொலைபேசித் துறையும் துணை போகிறதே என்கிற கோபம் எழுவது எந்த விதத்திலும் தவறாகாது.
கம்ப்யூட்டருக்கும் அதே கதிதான் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் கையில் கம்ப்யூட்டரைக் கொடுத்தால் ஜோசியம்தான் பார்க்கிறார்கள்.
யுனிக்ஸ், ஜாவா, ஆரக்கல், ஆட்டுக்கல் எல்லாம் அத்துபடியில்லை என்றாலும் ஓரளவுக்காவது கம்ப்யூட்டர் தெரிந்தவன் என்ற முறையில் சொல்வதானால்…
இரு உயிரினங்களுடைய பிறந்த தேதி – இடம் – நேரம் இவற்றைக் கொடுத்தால் அது உடனடியாக கணித்துக் கொடுக்கும் என்பது உண்மைதான். ‘பதிமூன்று பொருத்தங்களும் பொருந்திப் போகிறது. கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தலாம்’ என்று கன கச்சிதமாகச் சொல்லும் என்பதும் உண்மைதான். அந்த இரண்டில் ஒன்று ஒரு நாயுடையதாக இருந்தாலும் அதன் பதில் இதுதான் 
இந்த ‘தேச பக்தர்களை’ கட்டாய ராணுவ சேவைக்கு இழுத்துக் கொண்டுபோய் எல்லையில் நிறுத்தி விடுவது எவ்வளவோ மேல்.
திரும்பி வந்தால் வீட்டுக்கு.
வராவிட்டால் நாட்டுக்கு.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

No comments:

Post a Comment