Saturday, June 23, 2012

காதல்…

காதல்… மொழிக்கு அது ஒரு வார்த்தை, பெற்றோருக்கு அது தங்களோடு முடிந்துபோன ஒரு விடயம், சமூகத்துக்கு அது கலாசார மீறல், காதலிப்பவர்களுக்கு இதயத்தில் இறக்கை விரிக்கும் பட்டாம்பூச்சி…. இந்த காதல் மனிதகுலத்திற்கு ஒன்றும் புதிதல்ல. இன்று நேற்றல்ல மனிதன் தோன்றிய காலம் தொடக்கம் இன்று வரை இளமையாக இருக்கும் ஒரு சில விடயங்களுக்குள் இந்த காதலும் ஒன்று. காவியங்களிலும் ஓவியங்களிலும் வடிக்கப்பட்டு இருந்தாலும் எவருமே இன்றுவரை சரியான ஒரு வரைவிலக்கணத்தை காதலுக்கு கொடுத்ததாக தெரியவில்லை.

ஆனால் நமது சினிமா கலாசாரம் ஒரு புதிய வரைவிலக்கணத்தை வரைந்துகொண்டிருக்கிறது அல்லது அது மக்களால் காதலுக்கான வரைவிலக்கணமாக புரிந்துகொள்ளப்படுகிறது. அந்தவகையான ஒரு தவறான புரிதலால் இன்று வயசுக்கோளாறுகளுக்கு காதல் என்று பெயர் சூட்டி காதலை கொச்சைப்படுத்தும் அசிங்கங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆமா காதலைப்பத்தி கலாய்க்க வந்திட்டாராம் என்று யாரும் கடுப்பாகிடாதீங்க. இது காதலுக்கு எதிரான பதிவு அல்ல.

Teenage Love

பதின்மவயது காலப்பகுதி..... ஒரு வித்தியாசமான அனுபவம்தான். அதுவரை இருந்த தடைகளை உடைத்து சுதந்திர வானில் பறக்க விரும்பும் காலம். பெற்றோர்களின் முகத்தில் கவலை ரேகைகள் படிய ஆரம்பிப்பதும் அதே காலப்பகுதியில்தான். அந்த காலப்பகுதியில் பலமான அத்திவாரத்தை போட்டுக்கொண்டவர்களின் வாழ்க்கை சரிவதில்லை. ஆனால் ஏற்கனவே இருக்கும் அத்திவாரத்தையும் கிளறி எறிபவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமும் இல்லை. அப்படிப்பட்ட பருவத்தில் எல்லோருக்கும் பொதுவாகவே மனதுக்குள் பட்டாம்பூச்சி ஒன்று பறக்க ஆரம்பிக்கும். அந்த பட்டாம்பூச்சி உண்மையில் ஒரு எதிர்ப்பாலின கவர்ச்சியின் தூண்டுதலேயன்றி அதற்கு பெயர் நிச்சயமாக காதல் இல்லை. அந்த எதிர்ப்பாலின கவர்ச்சிதான் காதலின் மூலகாரணம் என்பதை ஒத்துக்கொண்டாலும் வெறுமனே அதைமட்டும் வைத்துக்கொண்டு அதை காதலாக வரைவிலக்கணப்படுத்துவதை போல ஒரு முட்டாள்தனம் இருக்கமுடியாது. இந்த எதிர்ப்பாலின கவர்ச்சி சமுதாயத்தின் பார்வைக்கு பயந்து அல்லது சுயகட்டுப்பாடு மூலம் அடங்கிப்போவதுமுண்டு. அல்லது சில நேரங்களில் அலைபாய்ந்து அணையை உடைப்பதும் உண்டு.

பதின்மவயதில் பூக்கும் காதலுக்கு நண்பர்களின் உசுப்பேத்தல்களும் ஒரு காரணம். “மச்சி அவ உன்னைத்தாண்டா பார்க்கிறா” (பெண்களிடையே எப்படியோ எனக்கு தெரியவில்லை) இந்த ஒற்றை டயலொக் எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கிறது. நாலு பேர் சொன்னதற்கப்புறம் பார்த்தால் நமக்கும் ஏதோ அந்தப்பிள்ளை லுக்கு விடுறமாதிரியே இருக்கும். ஏனென்றால் இந்த வயசில நமக்கு ஒரு லவ்வர் தேவையே. (காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் வாறமாதிரியே இருக்கா? சத்தியமா அதுதாங்க உண்மை.)

Teenage Love

எனது நண்பர்கள் சிலரது அனுபவங்கள் எனக்கு ஒன்றை தெளிவாக புரியவைத்திருக்கின்றன. பதின்மவயதில் தோன்றும் ஹோர்மொன்களின் ஜாலத்தை மட்டுமே காதலாக கருதி களமிறங்கியவர்கள் அந்த காதலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வேதனைகளை சுமக்கிறார்கள். திடீரென்று பெற்றோர்களை அந்நியராக பார்க்கவும் அவளுக்காக அல்லது அவனுக்காகவே தாம் பிறந்ததாகவும் ஒரு தோற்றத்தை இந்த வயசுக்கோளாறு விதைத்து விடுகிறது. எல்லாம் இந்த சினிமா செய்த திருவிளையாடல்தான். கண்டதும் பற்றிக்கொள்வது, கையை வெட்டிக்கொள்வது, சூடு வைத்துக்கொள்வது என்று ஏகப்பட்ட வன்முறைகளால் காதல் என்ற மலரை கசக்கி முகர்ந்த நிலையாகி விட்டது. எனக்கு தெரிந்தவரையிலேயே எனது நண்பர்களில் சிலர் இந்த வயதுக்கோளாறு என்ற குளிர் ஜூரம் வந்து அவஸ்தைப்பட்டிருக்கிறார்கள்.

எனது நண்பர்களிலேயே தனது காதலியை காணவில்லை அல்லது அவள் கதைக்கவில்லை அல்லது அவளுக்கு காய்ச்சல் என்று சின்ன சின்ன விடயங்களுக்காக மின்னழுத்தியால்(Iron box) சூடு வைப்பவர்களையும் ஊசியால் கீறுபவர்களையும் அதிகம் பார்த்திருக்கிறேன். இந்த பைத்தியக்காரத்தனத்தை எந்த வகையில் அடக்குவது என்று புரியவில்லை. அதே காதலைப்பற்றி காலங்கடந்தபின்பு கேட்டால் அது ஏதோ அறியாத வயசில புரியாத மனசில ஏற்பட்ட கவர்ச்சி (அவங்கட பாஷையில் JUST IMPRESSION) நான் இப்பத்தான் ஒருத்திய உண்மையா(SINCERE ஆம்) லவ் பண்ணுறன் மச்சான் என்று மீண்டும் இன்னொரு நேர்த்திக்கடன் படலத்தை ஆரம்பித்து விடுகிறார்கள்.

அடுத்தவகையிலான பருவக்காதல் பள்ளிப்பருவத்துடன் முடிந்து போவது. நேரிலே காணும் வரை உருகி உருகி காதலித்து விட்டு பாடசாலை காலம் முடிந்து பிரிந்து சென்றதும் கவர்ச்சியும் முறிந்துவிடும். இத்தகைய பதின்மவயதுக்கவர்ச்சியால் கல்வியை தொலைத்தவர்களும் ஏராளம்.

Teenage Love

இதற்குரிய காரணம் பெரும்பாலானவர்களது கண்ணில் முதலில் படுவது எதிர்ப்பாலாரிடம் காணப்படும் தமக்கு பிடித்தமான குணாதிசயங்கள் மட்டுமே அதிலும் குறிப்பாக வெளித்தோற்றம். அதை மட்டும் விரும்பும் அவர்களால் தமக்கு பிடிக்காத குணாதிசயங்களும் அவர்களிடம் இருக்கும் என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடிவதில்லை. அல்லது அவர்கள் புரிந்து கொள்ள முயல்வதில்லை. ஆனால் அந்த யதார்த்தம் கசக்கும் போது அவர்களுக்கிடையிலான கவர்ச்சியும் உடைந்துபோகிறது. இன்னொன்று பதின்மவயதில் ஏற்படும் திடீர் உள உடல் மாற்றங்களால் “என்ன பொண்ணுடா அவ” என்று நினைத்த அதே பெண்ணை பதின்மவயதை தாண்டி ஒரு பக்குவப்பட்ட நிலைக்கு வரும்போது “பொண்ணாடா அவ?” என்று நினைக்க தோன்றும். ஆனால் சத்தியமா இந்த ஞானம் எல்லாம் பதின்மவயதில் தோன்றுவதில்லை. அதை சொன்னால் பதின்மவயதில் ஏறப்போவதும் இல்லை

இவை எல்லாவற்றையும்விட மிகமுக்கியமான பிரச்சினை இளவயது கர்ப்பங்கள். இதுவும் இந்த வயதுக்கோளாறின் வெளிப்பாடுதான். பதின்மவயதில் தோன்றும் கவர்ச்சியை காதலாக கருதி ஒருவரையொருவர் முற்றுமுழுதாக நம்பி வரம்பு மீறுபவர்கள் வாழ்நாள் முழுவதும் வலிகளுடனேயே வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பதின்ம வயதுக்காலப்பகுதி காதலிக்க ஏற்ற காலப்பகுதியாக இருக்கலாம் ஆனால் கல்யாணம் செய்து குடும்பமாக வாழ்வதற்கு உள ரீதியாகவும் உடல்ரீதியாகவும் முற்றிலும் பொருத்தமற்றது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை. நமது சினிமாக்களில் காட்டப்படுவது போல “கர்ப்பமா? கட்டுடா தாலிய.” என்று அறுகரிசிபோட மாட்டார்கள். சட்டத்தின் படி நடப்பவர்கள் உள்ளே போடுவார்கள். நம்மூரில் தர்மத்தின் படி நடந்தவர்கள் என்றால் “கர்ப்பமா? வெட்டுடா அவன.” என்று அறுத்து விடுவார்கள்.

ஆனால் நான் இதுவரையில் சந்தித்ததில் ஒரு சிலர் மட்டும் இந்த பதின்ம வயதுக்கவர்ச்சியை முறையான பாதையில் திருப்பி அதை காதலாக ஏன் கல்யாணமாகவே வெற்றி கண்டிருக்கிறார்கள். காதலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்கள் எவருமே பதின்மவயதில் பறக்கும் பட்டாம்பூச்சியை நம்பி வாழ்க்கையை தொலைக்கவில்லை. அவர்களுடைய காதலுக்கு தொடக்கப்புள்ளி அந்த பதின்ம வயது கவர்ச்சியாக இருக்கலாம் ஆனால் அந்த புள்ளி மட்டுமே அவர்களது வாழ்க்கையாக இருந்ததில்லை. அவர்கள் அதை வெறுமனே எதிர்ப்பாலின கவர்ச்சி என்ற வட்டத்தை தாண்டி வந்து பருவவயதுக்குரிய உணர்ச்சிகளால் உந்தப்படும் காலத்தையும் கடந்து முறையாக வெற்றி கண்டிருக்கின்றனர்.

என்றைக்கு ஒரு ஆணோ பெண்ணோ தனது காதலியின் அல்லது காதலனின் குறைகளையும் நேசிக்கதொடங்குகிறார்களோ அன்றைக்குத்தான் அவர்கள் Made for each other. ஆனால் அந்த பக்குவம் பதின்மவயதில் மிகமிக அரிதாகவேயுள்ளது. இறுதியாக பதின்மவயதிலுள்ள எனது சகோதரர்களுக்கு.....
“உங்கள் காதல் உண்மையானது என்றால், அது காலம் கடந்து வாழும் என்றால் அதை பதின்ம வயது முடியும் வரை மறைத்து வைத்திருங்கள். பதின்ம வயதுக்காலம் முடிந்த பின்பும் உங்களுள் அந்த காதல் ஜீவித்துக்கொண்டிருந்தால் தாராளமாகவே அதை வெளிப்படுத்துங்கள். இது சுயமாக முடிவெடுக்கப்பழகும் காலமே தவிர அனைத்து முடிவுகளையும் சரியாகவே எடுக்கும் காலமல்ல”

No comments:

Post a Comment