Wednesday, October 13, 2010

சிந்து

நமக்குத்தான் தமிழ்நாட்டை தாண்டுனா மனுசங்க லாங்குவேஜே புரிய மாட்டீங்குது. இதுலே மெஷின் லாங்குவேஜ் வேற ! ரொம்ப அலுத்துகிட்டே லேப்புக்கு போனோம். அவுட்புட்டை காட்டுனாத்தான் ஆச்சுன்னு அங்க இருக்குற லெக்சரர் பண்ற அழிச்சாட்டியம் இருக்குதே?? ஏதாச்சும் இன்புட் இருந்தாதானே ? தெரிஞ்சா காட்டமாட்டமா? என்ன .பண்றது ‘லேப்’ குள்ள போனா ஒரு இன்பியலான காட்சி !! சிந்து அங்கே லேப்பில் !! அதுவும் எங்க லெக்சரர் கூட ஏதோ பேசிகிட்டு இருந்தா ! பாவம் அவளுக்கும் அவுட்புட் வரலையோ என்னவோ !“பாய்ஸ் ! இவங்க பேர் சிந்து . இவங்கதான் உங்க ‘லேப் இன்ஸ்ரக்ட்டர்’ ஏதாசும் ப்ரோக்ராம் சம்பந்தமா சந்தேகம் இருந்தா கேட்டுக்கலாம்! “ ஒரே நேரத்தில் அதிர்ச்சியும் இன்பமும் !! என்னடா இது ஸ்டூடண்டுன்னு நெனச்சமே !! நமக்கு ஒண்ணும் தெரியாதுன்ன மதிக்க மாட்டாளே ! வேற வழியே இல்லை சிந்துவுக்கு முன்னாடி நம்ம மானம் போய்டகூடாது. முடிவெடுத்தேன்.
சிந்துவுக்கு ரொம்ப தங்கமான மனசு ( நெசமாத்தான் ) எந்த சந்தேகம்னாலும் உண்டனே க்ளீயர் செஞ்சா.நமக்குத்தான் டவுட்டே வராதே. ஏதாச்சும் தெரிஞ்சாதானே ! எல்லாரும் Flow Chart வச்சுகிட்டு அல்லாடிகிட்டு இருந்தா நான் சிந்துவொட Flow லேப்பில் எங்க இருக்குன்னு அல்லாடிக்கிட்டு இருந்தேன். இப்படியே விட்டா சரிப்படாது. ஏதாச்சும் ‘டவுட்டு’ ன்னாதானே சிந்து கிட்டே பேசமுடியும். கஷ்டப்பட்டு ஒருவாரம் ப்ரோக்ராம் கத்துகிட்டு சிந்து கிட்டே கேட்கறதுக்காக வண்டி வண்டியா டவுடோடே போனேன்.நான் கேட்ட வரலாற்று சிறப்பு மிக்க டவுட்டுகளைக் கேட்ட சிந்து இரண்டே வரிகளில் பதில் சொல்லித் தீர்த்துவிட்டு போனாள். ‘ ச்சே! என்ன இது ஒரு வாரம் ப்ரிபேர் பண்ணுனது வேஸ்ட் ஆகிபோச்சே! எப்போடா கம்ப்யூட்டர் லேப் வரும்ன்னு பசங்க எல்லாரும் தவம் இருக்க ஆரம்பிச்சிட்டோம். கம்ப்யூட்ட்ர் லேப்புன்னாலே காத தூரம் ஓடுர பசங்க கூட லேப் 2 மணிக்கின்னா 1 மணிக்கே போய் உட்கார ஆரம்பிச்சிட்டாணுங்க!“ மாப்ளே இப்படியெல்லாம் சப்பைத்தனமா சந்தேகம் கேட்டா எப்படி? சும்மா நச்சுன்னு அவ பதிலே சொல்ல முடியாத மாதிரி டவுட் கேளுடா. நீ கேட்கற கேள்விலயே உன் முகம் சும்மா பச்சக்குன்னு ஒட்டிக்கணும் ! அப்படியொரு டவுட் எடுத்து வுடுடா !! “ என் நலம் விரும்பி தோழன் துரைசிங்கம் சொன்னதையே வேத வாக்காகக் கொண்டு சந்தேகத்தை தேடி ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையில் இதுவரை எட்டிப்பார்த்திராத கல்லூரி லைப்ரரி வரை ஓடினேன்.
ஒருவழியாக சிலபல டவுட்டுகளை வெற்றிகரமாக கண்டுபிடித்தேன்.ஒகே அடுத்தது action தான் ! மத்தியானம் பசங்க எல்லாம் லேப்புக்கு போக ஆரம்பிச்சானுங்க. ‘டேய் துரை அப்படியே போய்கிட்டு இரு நான் பாத்ரூம் போய்ட்டு வாரேன் என்ன ? ‘ ‘சீக்கிரம் வாடான்னு’ சொல்லிட்டு ஓடினான். எல்லாரோடையும் போனா பத்தோடு பதினொன்னு! கொஞ்சம் லேட்டா போனாத்தான் நநன் லேட்டஸ்டா தெரிவேன். என் ஐடியாவை நினைத்து நானே என்னை பாராட்டித் தள்ளினேன்.எல்லாரும் போய்ட்டானுங்க போல ! ஒரு பயலையும் வழியிலே காணோம்.இதோ லேப் தெரிகிறது. லேப்டாப் போல சிக்கென்று என் சிந்து. என்னை கவனித்துவிட்டாள் !! என்னப் பார்த்ததுமே அவள் முகத்தில் ஒரு இனம் புரியாத உணர்ச்சி. “ கமான் பாண்டி ஒர்க் அவுட் ஆகிடும் போல இருக்கே !! “ நேரா அவள் டேபிளுக்கே போய் டவுட் கேட்டுற வேண்டியதுதான். பசங்க எல்லாம் ஏதோ பில்கேட்ஸுக்கே கோடிங் கத்துத்ர்ற ரேஞ்சுல எதையோ தட்டிகிட்டு இருந்தானுக.என்னையவே பார்த்துகிட்டு இருக்காளே !! எங்கோ மனம் பறந்தது. அருகில் சென்றவுடன் சிந்துவின் பார்வையில் ஒரு தவிப்பு. நான் என் சந்தேகங்களை எடுத்து விட ஆரம்பித்தேன். சிந்து ஏதோ என்னிடம் சொல்ல வந்த மாதிரி தெரிந்தது. விடலையே ! இப்போதே முழுசையும் கேட்டுடணும் இல்லேண்ணா எனக்கு மறந்து போச்சின்னா?? ஒருவழியாக கேட்டு முடித்துவிட்டு சிந்துவைப் பார்த்தேன்.யெஸ் அவள் முகத்தில் குழப்பம். இதைத்தான் எதிர் பார்த்தேன். தெரியலைன்னு சொல்லப் போறா இல்லை ரெபர் பண்ணிட்டு சொல்றென்னு சொல்லப் போறா !! எம் முகத்தில் பெருமிதம் ததும்பி வழிந்தது. “நான் ஒன்னு சொன்னா தப்பா நெனச்சிக்க மாட்டீங்களே?” “ நோ நோ மேம்! “ நீங்க உங்க பேண்ட் ஸிப்பை போடலைன்னு நெனைக்கிறேன் ! “ ஆயிரம் போக்ராண் குண்டு என் மனதில் . என் கண்முன்னே என் மானம் ஸிப் வழியாக போய்டுச்சே!! டேய் என் முகம் கண்டிப்பா அவளுக்கு நெனப்புல வரும் ஆனா அது நான் கேட்ட கேள்வியினால இல்லே !!! யாராச்சும் ஒரு நாலு முழக் கயிரு கொடுங்கப்பூ அப்படியே தொங்கலாம் போல இருக்கே !!! இதப்போயி எப்படி மறந்தேன் ! இப்போ நெனச்சாலும் காலெல்லாம் நடுங்குது !

No comments:

Post a Comment